பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



மாணிக்கவாசகரின் திருவுள்ளம் பிணக்குகளினின்று விடுதலை பெற்றது. இறைவன் தன் விருப்பம் தன் விருப்பமாகக் கொண்டவரானார்! “வேண்டுவதும் உன் தன் விருப்பன்றே!” என்பது மணிமொழி. அறிவால் சிவனே யாய நிலை மாணிக்கவாசகருக்குக் கிடைத்ததது.

பிணக்கி லாதபெ ருந்து றைப்பெரு
மான்! உன் நாமங்கள் பேசுவார்க்(கு)
இணக்கி லாததோர் இன்ப மேவருந்
துன்ப மேதுடைத் தெம்பிரான்
உணக்கி லாததோர் வித்து மேல்விளை
யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக் கோலம் நீ வந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே

(திருக்கழுக்குன்றப் பதிகம்-1)
தனித்துணை

இந்தப் பிறப்பு, துன்ப நீக்கத்திற்காகவே! துன்பத்தின் காரணமாய அறியாமை நீக்கத்திற்காகவே! ஆயினும் உடலுறு வாழ்க்கையில் உயிர் உறும் துன்பம் தாங்கொணாதது; உள்ளவாறு உணரின் தாங்கவே இயலாதது. இத்துயர் அனுபவத்தின் விளைவே- தாக்கமே திருவருட் சிந்தனை!

இறைவன்-சிவபெருமான் உயிருக்கு வாய்த்த தனித்துணை! ‘தனி’ என்ற அடைசொல் சிறப்புப் பற்றியது. உயிருக்கு ஈடும் எடுப்பும் இல்லாத துணையாதலின் ‘தனித்துணை’ என்றார். உயிர் சந்திக்கும் துணைகள் பலப்பல உண்டு. தாயினும் சிறந்த துணை ஏது? ஆயினும் தாய் காலத்தினால் பிரிக்கப்பட்டு விடுகிறாள். இடம், தொலைவு நட்புத் துணையினைப் பிரித்து விடுகிறது. நண்பரெனக் கொள்பவர்களில் பலர் கொடுத்தல் குறைபடும் பொழுது பிரிவர். ஆனால், இறைவன்- சிவன் பிரிவதில்லை.