பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


விட்டமையைக் குறிப்பிடுகின்றார். நீதி சார்ந்த வாழ்க்கை வாழாத வரையில் பிறவி நீங்காது; பிறந்து இறந்து உழலுதலும் தவிர்க்க முடியாதது என்பது திருவாசக உண்மை.

நீதியைச் சார்ந்து நீதிமானாக வாழ்ந்தாலே பிறவி நீங்கும். நீதியொடு தொடர்பிலாத இரங்கத்தக்க வாழ்க்கை வாழும்பொழுது கடவுளின் கருணை கிடைக்காது. மன்னித்து மதிப்பளிக்கத் தாயின் கருணை தேவை! எனவே, “பாதி மாதொடுங்கூடிய பரம்பரன்” ஆட்கொள்கின்றான்.

இறைவன் நிரந்தரம்; நீதி நிரந்தரம். ‘நிரந்தரமாய் நின்ற ஆதி’ என்ற தொடர் ஆழ்ந்த சிந்தனைக்குரியது. ஆம்! நாளும் உலகில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பண்டு இருந்த பல நாடுகள் இப்போது இல்லை. ஆறுகள் இல்லை. மலை, கடலாகி இருக்கிறது. கடல், மலையாகி இருக்கிறது. சில உயிரினங்கள் அழிந்து போயின. வல்லாண்மை வாழும் போராட்டத்தை நடத்திக் கொண்டே இருக்கிறது. இதற்கிடையிலும் இந்த உலகம் நிலைபெற்று இருக்கிறது என்றால் எப்படி? எதனால்?

சிறுமைகளைக் கடந்த பொருள் பொதிந்த புகழுக்குரியவர்கள் செய்த தியாகங்களின் பயனாக உலக வரலாறு இயங்கிக் கொண்டே இருக்கிறது. இப் புவிக் கோளத்தில் மனித குலம் அழிந்துவிடவில்லை. ஏன்? எதனால்? நீதி உணர்வு நிலை பெற்றிருப்பது ஒரு காரணம் அதுமட்டுமல்ல. நீதி என்றும் நிலையானது.

“மனிதனை நேசி!” “மனிதத்தைப் போற்று!” “பிறர் பங்கைத் திருடாதே!” “பிறர்க்கென முயலும் நோன்பினைக் கொள்க!” “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புக!” “எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணுக!” - இன்னோரன்ன நீதி சார்ந்த வாழ்க்கை நெறிகள் என்றும் எப்பொழுதும் நிலைத்திருக்கக் கூடியன. இவையே நீதி, எந்த யுகத்திற்கும் இந்த நீதி தேவைப்படும். ஆதலால், நீதி நிலையானது. நீதி, கடவுளின்