பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இறைவன்- சிவன் பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்புதுமையாகவே விளங்குகின்றான்.

கடவுள் நம்பிக்கை மனித குலத்தில் கால்கொண்டு கிடக்கிறது. ஆனால் கடவுள் இலக்கணங்களில் எண்ணற்ற வேறுபாடுகள்! நாம்- ஆன்மாக்கள் கடவுளைத் தேடுவது ஏன்? வழிபடுவது ஏன்? காணாதனவற்றைக் காணவேண்டும். கேளாதனவற்றைக் கேட்கவேண்டும். என்றும் மாறாத் துணையாக அடையவேண்டும். நரகொடு சொர்க்கம் நானிலம் புகினும் பிரியாத தலைவனாக இருத்தல்வேண்டும். பிழையெலாம் தவிரப் பணித்து ஆட்கொள்ள வேண்டும். என்றும் இன்பம் பெருகும் இயல்பினை வழங்கியருளுதல் வேண்டும். இத்தகு நலன்களைப் பெறுவதற்குப் பரம் பொருளைத் தலைவனாகப் பெறுதல் தகுதி மிகுதியும் உடையது. தலைவரைத் தேர்ந்தெடுத்தல் மிக்க சிக்கலான பணி! நாற்காலி ஆசை தேவர்களுக்கும் உண்டு! வேள்வியில் சொரியும் அவிப்பொருளை உரிமையில்லாத நிலையிலும் தேடித் தின்பவர்கள் தேவர்கள். இந்தத் தேவர்களுக்கு அம்மம்ம, எத்தனை எத்தனை ஆசாபாசங்கள்! தேவர்களுக்கு நெறியும் இல்லை! முறையும் இல்லை! அவரவர் மனம் கொண்டதே மாளிகை. அதனால் திருக்குறள் “தேவரனையர் கயவர்” என்று திட்டித் தீர்த்துவிடுகிறது. கயவர்கள் இலக்கணம் என்ன? அவர் அவர் நலத்திற்கு அவரவர் விருப்பத்திற்கேற்ப வாழ்வர். நிர்வாணமான சுயநலவாதிகள். இவர்கள் கொலையிற் கொடியர்.

இறைவன்- சிவன் அப்படியல்ல. இறைவன்-சிவபெருமான் தனக்கென ஒன்றும் வேண்டாதவன். குறி யொன்றும் இல்லாத கூத்தன்! இறைவன் திருநீறு பூசி விளங்குவதுகூடத் தம்மை வழிபடும் அடியார்களின் வினை நீங்குவதற்குத்தான்! குழந்தைகளின் நோய்க்குத் தாயே மருந்துண்பாள்; பத்தியம் பிடிப்பாள்! அதுபோல இறைவன்-சிவபெருமான் ஆன்மாக்களின் நலனுக்காகவே ஐந்தொழில்