பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருமணமே நடைபெற்றது. சுந்தரர் வரலாறு இதற்குச் சான்று.

இன்று திருமணங்களில் வழக்கத்தில் இருக்கும் கொடுமையாகிய வரதட்சணை ஒழிய வேண்டுமானால் காதல் திருமணங்கள் நடைபெற வேண்டும். பழங்காலத்தில் மனிதப் பண்பாட்டு அடிப்படையிலான சமுதாய அமைப்பு இருந்தது. அதனால் குலம் பார்ப்பார்கள்; குணம் பார்ப்பார்கள்; சீலம் பற்றிச் சிந்தனை செய்வார்கள்! இன்றோ பண மதிபீட்டுச் சமுதாயம்! எங்கும் எதிலும் பணத்தின் ஆதிக்கம்! மாணிக்கவாசகரின் திருவெம்பாவைப் பாடல்களில் வரும் பெண்கள், மரபுவழி வந்தவர்கள். ஆதலால், அவர்கள் தங்களுக்கு வாழ்க்கைத் துணைவராக வருபவர்கள் சிவனடியார்களாக இருக்கவேண்டும் என்று விரும்புகின்றனர். அதனால் சிவனடியாரை கணவராகக் கொண்டு அந்தக் கணவரின் தாள்களைப் பணிவோம் என்கின்றனர். ஆம்! தலைமகளைத் தாங்கும் தாள்கள் தலைமகனுடைய தாளாண்மைமிக்குடைய தாள்கள்தானே! இங்குத் தாள் பணிவோம் என்பது பெண்ணடிமைத் தனத்தின் விளைவல்ல. தாள்-தலைபோல விரும்பித் தொழுதல்.

அடுத்து, சிவனடியார்களுக்கே பாங்காவோம் என்கின்றனர். பாங்காதல் என்பது அயரா அன்புடன், பரிவுடன் பணிவிடை செய்தல் என்பதாகும். இத்தகு சிவனடி யாரையே மணப்போம், கணவராக ஏற்போம் என்று கூறுகின்றனர். ஆம்! சிவனடியார்கள்- நாங்கள் மணக்கப்போகும் சிவனடியார்கள் உவப்பப் பணி செய்வோம்! தொண்டு செய்வோம்! தற்சார்பின்றிக் கணவன்மார்களின் நலனையே நலனாகக் கொண்டு வாழ்வோம் என்கின்றனர்.

இறைவா! சிவபெருமானே! இந்தப்படி சிவனடியாரை மணக்க, தொண்டு செய்து வாழ்ந்திடத் திருவுள்ளம் பற்றுக! சிவனடியார் தாள் பணிவோம்! இங்ஙனம் சிவனடியாருக்குப்