பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

151


பணிசெய்யும் வாய்ப்பை வழங்கியருள்க! இந்தப் பேறு கிடைக்கச் செய்தருள்க! சிவனடியார்களைக் கணவராகப் பெற்றுப் பணி செய்யும் வாய்ப்புக் கிடைப்பின் எங்களுக்கு ஒரு குறையும் இல்லை!

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளே! நாங்கள் ஆரத் துய்த்து மகிழ்வதற்கேற்பப் பின்னைப் புதுமை நலன்களையுடையவனே! சிவனடியார் எம் கணவராதல் பெரும்பேறு! அவர்தம் குறிப்பறிந்து தொழும்பாய்ப் பணி செய்தால் யாதொரு குறையும் இல்லை என்றெல்லாம் போற்றுகின்றனர்.

இந்தப் பாடலின் கருத்து வாழ்வாக மலர்ந்தால் வீடுகள் சிறக்கும்! இல்லறம் வளரும்! சிவநெறி மலரும்! மழை பொழியும்! மண் வளம் கொழிக்கும்!

முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே!
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே!
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்!


அன்னவரே எங்கணவர் ஆவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்!
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்!

(திருவெம்பாவை-9)
புண் சுமந்த பொன்மேனி!

விளையாட்டு, விளையாட்டாக மட்டும் இருத்தலில் பயன் இல்லை. விளையாட்டின் போக்கிலேயே அறிவியல், அருளியல் கருத்துகளைக் கற்றுத் தரவேண்டும். அம்மானை என்பது பெண்கள் விளையாடும் ஒருவகை விளையாட்டு!