பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

159



கடவுளையும் கடவுளின் அருளையும் மறுத்து வாழ்தல் என்பது அறிவுடைமையன்று. கடவுள் இல்லை என்பது எளிதான விவாதம். ஆனால், இந்தப் பரந்த உலகியலில் ஓர் ஒழுங்கு (Order) இருக்கிறது. முறைபிறழாத நிகழ்ச்சிகள் (Consistency) இருக்கின்றன. இவை எப்படி? எதனால்? நியதி என்று சமய நூல் கூறும். இப்படியன், இந்நிறத்தன், இவ் வண்ணத்தன் என்ற வரையறை ஏதும் கடவுளுக்கு இல்லை. திருவள்ளுவர், “வாலறிவன்” என்றார். “மூரி முழங்கொலி நீர்” என்றும் “வாசமலர்” என்றும் திருமுறை கூறும். ஆதலால், சமயவாதிகள் பலபடக் கூறும். கடவுள் உருவமும், தன்மைகளைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை! கடவுள் உயர்வற உயர்ந்த பேரறிவு! பேராற்றல்! வரம்பில் இன்பம்!

மாணிக்கவாசகரும் தொடக்க காலத்தில் கடவுளின் அருளை மறுத்து வாழ்ந்திருப்பார் போலும்! “மறுத்தனன் யான் உன் அருளை” என்று கூறுகின்றார். அங்ஙனம் மறுத்தது அறியாமையின் விளைவு என்று ஒத்துக் கொள்கின்றார். அறியாமை என்பது தெரியாமையன்று. முறை பிறழ உணர்தல் அறியாமை. மறுத்து வாழ இயலாத கடவுள் அருளை, மறுத்து வாழலாம் என்பது முறை பிறழ்ந்த செயல்தானே! இறைவா! யானுன் அருளை மறுத்ததால் வெறுத்து ஒதுக்கிவிடாதே! மணி, அதன் மதிப்பினை உணர்ந்தார்க்கும் உணராதருக்கும் ஒளி தரும். நீ, மணி, மணிகளுக்கெல்லாம் சிறந்த மணி. ஆதலால் என்னை வெறுத்து ஒதுக்காதே! நான் உன்னை வெறுத்ததற்குக் காரணம் நான் அல்ல. என்னுடைய வினைத் தொகுதி ஆட்டி வைத்தது. ஆதலால் என்னை ஒதுக்காமல் என் வினைத் தொகுதியை ஒறுத்திடு. எனக்குக் கேடு செய்யும் வினைகளிலிருந்து என்னை மீட்டு எடு! ஆண்டுகொள்! இறைவா, நான் சிறியவன்! வினைத் தொகுதி வசப்பட்டவன். ஐவரொடு போராடி வெற்றிபெற முடியாமல் தவிப்பவன்.