பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

161


இன்றோர் இடையூறு எனக்குண்டோ?
எண்டோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழை செய்வாய்
நானோ இதற்கு நாயகமே!

(குழைத்தபத்து-7)

இறைவா, நாட்டவர் சொல்லக் கேள்வி! அழுக்கொடு சேர்ந்தால் நிலம் அழுக்காகும். அழுக்கொடு சேர்ந்தால் தண்ணீர் அழுக்காகும். ஆனால், நெருப்பு! அழுக்கொடு சேர்ந்தால் நெருப்பு அழுக்காகாது. அது மட்டுமல்ல, அழுக்கும் தூய்மையாகும் என்பர். திருப்பெருந்துறைப் பெருமானே! உனது கண்களில் ஒன்று அக்கினி; தீ! ஏன் என் ஆணவத்தைச் சுட்டுப் பொசுக்கக் கூடாது? என்னுடைய வினை வளத்தை நீறாக்கக் கூடாது? முழு நீறு சண்ணித்த திருமேனியை உடைய சிவனே! உயிர்கள் செய்த வினைகள் நீறாவதற்காக நீறணிந்து நிற்கின்றாய்! வினைகள் நீங்கி நிற்கின்றாய்! விளங்கும் முதல்வனாகி நின்றருள் செய்கின்றாய்! ஊழி முதல்ல! ஒருவ! நீ, நன்றே செய்வாய் என்று நம்பி ஆட்பட்டேன் இறைவா, நீ நன்றுடையாய்! எத்தகைய நன்று? தீமையே கலப்பில்லாத நன்று! திருவருள் நன்று! ஆனால், நீ செய்த நன்றை நன்றெனக் கருதாமல் பிழையென எண்ணினேன்! உன்னுடைய அருளிப்பாட்டில் பிழையே இருக்காது. பிழை இருக்க வழியே இல்லை! ஆயின் என்னுடைய அறியாமையால் பிழையென்று கருதினேன்! நின்னருளைத் துணிந்து மறுத்தேன்.

‘சிவாயநம’ என்று சொல்லும் பேற்றினை அருளிச் செய்தனை! அன்றே எனது அல்லல்கள் அகன்றன என்று எண்ணியிருந்தேன். ஆனால், அல்லல்கள் அகன்ற பாடில்லை. மீண்டும் மலவாசனை தாக்குகிறது. பாசி படர்ந்த குளத்தில் பாசி அகன்றும் முழுதும் அகலாமல் உடன் படர்தல் போல என்னை ஆணவம் அடர்த்துகிறது. நெய்க்குடத்தைச் சுற்றிலும் எறும்புகள் மொய்ப்பதைப் போல