பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


குறைகிறது; ஆன்மா, தூய்மையுறுகிறது. திண்ணனாருக்கும் அவர்தம் அன்புக்குமிடையே போட்டி. திண்ணனாரின் அன்பு முன் செல்கிறது. திண்ணனார் குடுமித் தேவரைக் கண்டார். நிலமிசை வீழ்ந்து வணங்கினார்; எழுந்தார்; மீண்டும் வீழ்ந்து வணங்கினார்; காளத்தி அண்ணலை நோக்கினார் திண்ணனார் “காளத்தி அண்ணல் சாலப் பசித்திருக்கிறார்” என்று உணர்கிறார். “பொறுத்திரு! சடுதியில் சென்று உணவு கொண்டு வருகிறேன்” என்றார்; ஓடினார்; ஓடினார்; வேட்டையாடினார். பன்றி அறுத்து இறைச்சியாக்கினார். அனலில் சுட்டார்; வாயில் போட்டுச் சுவை பார்த்தார். ஆனால் சுவையை அனுபவிக்கவில்லை. பக்குவப்படுத்திய இறைச்சியைத் தேக்கிலையில் எடுத்துக் கொண்டார். “என் அப்பன் காளத்தி அப்பன் குளித்திருக்க மாட்டானே!” என்று எண்ணினார். குளிப்பாட்டத் தன் வாய் நிறையத் தண்ணீரை எடுத்துக் கொண்டார். பூக்களைத் தலையில் எடுத்துக் கொண்டார்; விரைந்து காளத்தியப்பன் சந்நிதிக்கு வந்தார். திண்ணனார் வாயில் கொண்டுவந்த தண்ணீரைக் காளத்தியப்பர் மீது சொரிந்து திருமஞ்சன மாட்டினார்; தலையில் இருந்த பூக்களை எடுத்துச் சூட்டினார். பின் கையில் தேக்கிலையில் கொண்டுவந்த ஊனை இறைவன் முன் படைத்து உண்ணுமாறு வேண்டினார். “நான் சுவைத்துப் பார்த்தேன் நன்றாக இருக்கிறது; உண்ணுக!” என்று இறைவனை வேண்டினார். மாலைப்பொழுது வந்தது; இருள் சூழ்ந்தது. “அப்பனே இருட்டில் தனியாக இருக்கிறாயே! துணை வேண்டாமா?” என்றெல்லாம் நீள நினைந்தார். இரவெல்லாம் விழித்து நின்று காத்தார்.

இந்தப் பூசை ஆகம வழிப் பூசையல்ல. புனல், பூ, தூபம், தீபம், மணியோசை முதலியன இல்லை. திண்ணனாரின் இந்தப் பூசையை இறைவன் விரும்பினார்; திண்ணனார் மெய் தீண்டும் பொழுதெல்லாம் மெய் குளிர்ந்தான். இதனால் வேடர் திண்ணனாரின் அன்பு, அன்பின் ஆற்றல் தெரிந்தது.