பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

191


வேண்டும். “இவர் தேவர், அவர் தேவர்” என்று ஆசைகளால் உந்தப்பட்டு அலை மோதல் கூடாது. ஈசனை- இறைவனை நினைந்து நினைந்து கன்று ஈன்ற ஆவின் மனம் போலக் கசிந்துருகி அழக் கற்றுக் கொள்ளுதல் வேண்டும். இதுவே ஆன்மிக வாழ்க்கை; சமய வாழ்க்கை.

நெறிமுறை பிறழ்ந்த சமூகத்தின் மதிப்பீட்டை எதிர் பார்க்கக் கூடாது; புகழை விரும்பி அலையக்கூடாது. பழிச் சொற்களை விரும்பி ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். கடவுள் உண்டென்றும் ஒன்றென்றும் துணிதல் வேண்டும். அக்கடவுளை ஆவின் மனம் போல நினைந்து நினைந்து கசிந்துருகி வழிபடல் வேண்டும்.

சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப
நாணது ஒழிந்து நாடவர் பழித்துரை
பூணது வாகக் கோணுத வின்றிச்
சதுரிழந் தறிமால் கொண்டு சாருங்
கதியது பரம அதிசய மாகக்
கற்றா மனமெனக் கதறியும் பதறியும்
மற்றோர் தெய்வம் கனவிலும் நினையாது

(போற்றித் திருவகவல் 68-74)
அக்காரம் தீற்றிய அதிசயம்

வாழ்வு சிறக்க சுய விமர்சனம் தேவை. விமர்சனம் என்பதைத் தூய்மை செய்தல் என்று கொள்ளலாம். ஒரு நாளில் எத்தனை தடவை கண்ணாடி முன் நின்று முகம் பார்த்துத் துடைத்துத் திருத்தம் செய்து கொள்கின்றோம்! அழகு செய்து கொள்கின்றோம்! அதுபோல நம் ஆன்மாவை-நாம் இயற்றிய செயல்களின் பயன்பாடு முதலியனவற்றை ஆய்வு செய்துகொண்டு பயனற்றவைகளைத் தவிர்த்துக் கொண்டு பயன்பாடுடைய பணிகளைச் செய்வது சுய விமர்சனம், எங்கே சுய விமர்சனம் புறக்கணிக்கப்படுகிறதோ