பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அல்லது தரமாக அமையவில்லையோ அங்கே பிறர் விமர்சனம் வரும். ஆனால், விமர்சனம் விமர்சனம்தான்! விமர்சனம் ஆக்கத்தின்பாற்பட்டதே! குற்றங் கண்டுரைத்தால் ஆக்கம் இல்லை; இருக்காது. விமர்சனம், எரியும் விளக்கில் சுடர் தட்டி விட்டு, எரிய விடுதல் போன்றது! அல்லது சுய விமர்சனம் பரிபூரண ஆக்கம்!

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் பெரும்பான்மையானவை சுய விமர்சனப் பாடல்கள். தன்னைத்தானே ஆய்ந்து தமது குற்றங்களை உணர்ந்து திருத்தம் காணும் வேட்கையில் பாடுகின்றார்! அழுது அழுது பாடுகின்றார்! அதனாலேயே திருவாசகத்தை ஓதினால் உருக்கம் ஏற்படுகிறது. “நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து” என்றும்,

யானே பொய், என் நெஞ்சும்
பொய்; என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால்
உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின்
தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன்
உனை வந்துறு மாறே!

(திருச்சதகம்-90)

என்றும் பாடுகின்றார்.

அறிவ னே! அமு தே!அடி நாயினேன்
அறிவ னாகக் கொண் டோ, எனை ஆண்டது
அறிவி லாமையன் றேகண்டது ஆண்ட நாள்
அறிவ னோ வல்ல னோ அரு ளீசனே!

(திருச்சதகம்-50)

என்றும் அருளிச் செய்துள்ளார்.