பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

193



மாணிக்கவாசகர் அறிவால் சிவமே என்று போற்றப்பெறும் அளவுக்கு உயர்ந்ததற்குக் காரணம் தம்மை உணர்ந்து தமது பழக்கங்களைத் தவிர்த்துப் பழகி சிவன் கழலே சார்பென்று உணர்ந்து சிவத்தினைச் சார்ந்து ஒழுகியதேயாம். மாணிக்கவாசகரிடம் ‘நான்’ கெட்டுப் போய்விட்டது; சிவமாம் தன்மை மேலிட்டது. ஆதலால், உலகியல் முன்னேற்றமானாலும் சரி, ஆன்மிக முன்னேற்றமானாலும் சரி சுய விமர்சனம் தேவை. சுய விமர்சனம் செய்து கொள்ள வில்லையெனில் வளர்ச்சியில்லை; பிறர் விமர்சனத்தைத் தாங்கி மாற்றிக் கொள்பவர்கள் உயர்வார்கள்!

மாயம்! உண்மையைப் போல் தோற்றுவது மாயம்! இந்த மாயம் நச்சுத் தன்மையுடையது! இது கடித்தவுடன் மனிதன் “நான்” ஆகின்றான். ‘நான்’ என்பது அகந்தையின் பரிணாமம். பற்றற்ற துறவி ஒருவர் பலகாலும் உண்ணாது, உறங்காது யாதொரு தீங்கும் செய்யாது நோன்பிருந்தார். அவர் இறந்து போன பிறகு சொர்க்கத்தில் இடம் கிடைக்கவில்லை! மீண்டும் பிறக்க ஆணையிட்டான் இறைவன். துறவி, “ஏன்?” “எதற்காக?” என்று இறைவனிடம் கேட்க “நான்” என்பது இழக்கப் பெறவில்லை என்றான் இறைவன். கொங்கண முனிவர் கதை நாடறிந்த ஒன்றுதானே! ‘நான்’ என்பது செருக்கினைத் தரும். செருக்கு, அன்பிற்குப் பகை; அருளுக்குப் பகை; மனித உறவுகளுக்குப் பகை; ஏன் அறிவுக்கும் ஞானத்திற்கும் கூடப் பகை. இந்த ‘நான்-ஐ’ ஒழித்தல் தவத்தில் சிறந்த தவம்.

“நான் கெட்ட வாபாடித் தெள்ளேணம் கொட்டமோ?”

“...............நாம் ஒழிந்து
சிவமான வாபாடித் தெள்ளேணம் கொட்டாமோ?”

என்றும் மாணிக்கவாசகர் பேசுவார். இந்த “நான்” கெடுதலைக் குமரகுருபரர் “பின்னும் ஓர் மாத்திரை குறுகினன்"