பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

195


வளரும். ‘எனது’ உரிமைச் செல்வம் அடுக்கிய பலவாக ஆக வேண்டுமானால் பொய் தேவைப்படும். ஒரு சில நல்லவர்கள் ‘பொய்யை’ப் பாதுகாப்புக்கு மட்டும் பயன்படுத்துகின்றனர். சிறுமதியினர் பொய்யையே கருவியாகப் பயன்படுத்துவர். அடுத்தவர் செல்வத்தைப் பறிப்பர். ‘எனது’ உடன்பிறப்புக்களைக் கூடப் பிரிக்கும். கைகேயியின் மனத்தைத் திரித்தது கூட “எனது” தானே! மழலைக் குழந்தையாக இருக்கும் பொழுது ‘நான்’ இல்லை; ‘எனது’ இல்லை; ‘எனது’ என்ற உணர்வு வந்தவுடன் பொய்யும் உடன் வந்து விடுகிறது. விளையாட்டுப் பொம்மையில் தொடங்கும் ‘எனது’, சொத்து வரையில் வளர்கிறது. பகையை மூட்டுகிறது. கலகத்தை வளர்க்கிறது; மனிதரைப் பிரிக்கிறது. நட்பு, காதல் உறவு எல்லாம் ‘நான்’ ‘எனது’க்கு முன் நிற்க முடியாமல் தோற்றுப்போயின. ‘எனது’ அற்றால் ‘நான்’ அறும். ‘நான்’ ‘எனது’ அற்றால் பொய் அகலும்; ‘பொய்யினைப் பல செய்து’ என்கிறார் மாணிக்கவாசகர். “பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்” என்பார் பிறிதொரு பாடலில். உண்மையல்லாதன வெல்லாம் பொய்! உரியதல்லாதது-செல்வமாயினும், புகழாயினும் அது பொய்தான்! இன்றைய சமுதாயம் இவர் அவர் என்றில்லாமல் அவரவர் தகுதிக்கு ஏற்றாற்போலப் பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்து, பொய்யிலே புரள்கிறது. பொய் கலந்த மெய்கூட இல்லை. உண்மையைச் சொன்னால் இந்தச் சமுதாயத்தில்- ஆட்சியமைப்பில் வாழ இயலாத நிலை இன்று! இன்று உண்மையைச் சொல்லி வாழ விரும்புபவர்கள் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டியதுதான்!

பொய், ‘நான்’ என்னும் செருக்கு, ‘எனது’ என்னும் செருக்கு ஆகியவை மனிதனை ஆட்கொண்ட பிறகு அவன் வாழ ஆசைப்படுகிறான்! ‘நான்’, ‘எனது’, ‘பொய்’ ஆகியன வாழ்வதற்குரிய இயல்புகள் அல்ல! ஆயினும் வாழும் ஆசை யாரை விட்டது? ஆதலால், நடிப்பர்! நடிப்பு பலவகை!