பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

203



பொய்யைக்கூட ஓரளவு சமாளிக்கலாம். மெய் போலப் பொய் கூறுபவரை சமாளிப்பது அரிது. இங்ஙனம் மெய்போலப் பொய் கூறுபவர்களைப் பற்றிதான் “பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்” என்று மாணிக்கவாசகர் கூறினார். ஆதலால், பொய்களைத் தவிர்த்து வாழாதவர்கள் சொர்க்கத்தை அடைய முடியாது. பொய்யால் புறமேயாகும் தன்மை பெறுவர். பொய்க்குத் துணை ‘யான்’ என்பது. யானும் பொய்யும் புறமே போந்தோம் என்றார். பொய்க்கு யான் துணை; யானுக்குப் பொய் துணை.

மனிதன் சொர்க்கம் அடையவேண்டுமா? அவன் ‘யான், ‘எனது’ என்ற செருக்கு உடையவனாக இருத்தல் கூடாது என்றார் திருவள்ளுவர். இவற்றுள் யான் மிகவும் மோசமானது. ‘யான்’ உறவுப் பகை. நட்புக்குப் பகை; காதலுக்குப் பகை; சமுதாயத்துக்குப் பகை; ஆதலால், ‘யான்’ என்ற செருக்கு அறவே ஆகாது. ‘யான், ‘எனது’ என்ற அகந்தை எள்ளளவும் மாறவில்லை” என்பது தாயுமானவர் வாக்கு. ‘யான்’ என்ற செருக்கில் விளைந்த மோதல்களும் கலகங்களும் பலப்பல. ‘எனது’ என்பதால் எழுப்பப்பெற்ற சுவர்களும், போடப்பட்ட வேலிகளும் எண்ணிலடங்கா. பூட்டு வியாபாரிகளின் நம்பிக்கைக்குரிய மூலதனமே “எனது” என்பதுதான்! ஒரு முனிவர்- தூய துறவி- நல்லவராயினும் அவருக்கு வீடு பேறு கிடைக்கவில்லை. அவர் வாயிற் காவலராகிய நந்தீசரிடம் ‘நான்’ வந்திருக்கிறேன் என்று சொன்னதால் இறைவனின் ஆணை ‘நான்’ இழந்தபின் வரட்டும் என்பதாயிற்று! ஆதலால் ‘பொய்யும் யானும்’ சொர்க்கத்தில் புகா. பொய்யும் ‘யான்’ எனும் செருக்கும் உடையவர் சொர்க்கம் புகமுடியாது. புறத்தே தள்ளப்படுதல் உறுதி.

புறத்தேயிருந்து சொர்க்கத்திற்குள் புக அன்பு வேண்டும். அந்த அன்பு மெய்யன்பாக இருக்கவேண்டும். மெய்யன்பு என்று கூறியதால் அன்பிலும் போலி- பாசாங்கு