பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

205


சுமப்பது பைத்தியக்காரத்தனம். அதனால் மாணிக்கவாசகர் “அன்பிலாதவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே!” என்று பாடுகிறார். ஆம்! அன்பிலாதவர் உறவு அஞ்சத்தக்கது. அன்பிலாதவர்கள் ஒழுக்கமுடையவர்களாகவும் இருக்கமாட்டார்கள்; வஞ்சனை, ஏமாற்று, சூது முதலியனவும் கொண்டிருப்பார்கள். ஆதலால், ஒழுக்கமுடையவராக இருக்க விரும்பினால் அன்புடையராக வாழ்தல் வேண்டும். மனிதன் தன்னுடன் தொடர்புடையார் மாட்டும், தொடர்பிலாதார் மாட்டும், கடவுள் மாட்டும் அன்பு செலுத்தும் வரை ஒழுக்கமுடையவனாக இருப்பான். பரிபூரண அன்புடையோராவதற்கு அறிந்தோ, அறியாமலோ போராடுவதுதான் வாழ்க்கை! அன்பு வளர, அன்பை அனுபவிக்க, அன்பு காட்ட “யான்” என்ற உணர்ச்சியைத் துறந்தேயாக வேண்டும். நாமனைவரும் பின்பற்ற வேண்டிய பண்புகள் அன்பு, அறிவு, பணிவு ஆகியன. அன்பு குறையாமல் வளர வேண்டுமாயின் பணிவு வேண்டும், விரும்பி அன்பு செய்யப் பழகுதல் வேண்டும். அன்பும் நுண்ணறிவும் ஒருசேரப் பெற்றால் எதையும் சாதிக்கலாம். வாணிகப் போக்கில்- வாணிகக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் அன்பு ஒன்றுக்குப் பத்து மடங்காகப் பயன் தரக்கூடியது. அன்பு தன்னையே கொடுக்கும். உண்மை, அறிவுக்குப் புலனாகாது. அன்புக்கே உண்மை புலனாகும். வாழ்க்கை என்ற கோட்டையை வலிமைப்படுத்த வேண்டுமாயின் அது நட்புறவால்தான் இயலும். அன்பு கொள்வதும், அன்பு பெறுதலும் மனித வாழ்க்கையின் தலையாய கடமை. உலகத்தில் மற்றெல்லாவற்றிற்கும் அழிவுண்டு. ஆனால் அன்புக்கு அழிவில்லை. அன்பிலும்கூடப் பிரிவு வருதல் உண்டு. பிரிவு, சிறிது காலமாக இருந்தால் அன்பு வளரும். பிரிவு நீடித்தால் துன்பந்தரும்; வதைக்கும்.

மாணிக்கவாசகர் தமக்கும், இறைவனுக்கும் இடையில் ஏற்பட்ட பிரிவை நீடிக்க விரும்பாமல் அழுது புலம்பிய புலம்பல்தானே திருவாசகம்! தீங்கிழைத்தவரிடத்திலும்