பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அன்பு காட்டுவதுதான் உண்மையான அன்பு. இங்ஙனம் தீங்கிழைத்தாரிடத்திலும் அன்பு காட்ட மனிதனால்தான் முடியும். அறியாமையாலேயே தீங்கிழைக்கிறான் என்று எண்ண வேண்டும். “அறியாமல் செய்கிறார்கள், மன்னித்து விடுக” என்று இயேசுபெருமான் செய்த பிரார்த்தனையை நினைவிற் கொள்க.

பிறந்தவர்கள் அனைவரும் இறப்பது உறுதி, அதற்குள் ஏன் அன்பில் வறட்சி என்று எண்ணி அன்பு காட்ட வேண்டும். கடவுள் மனிதனுக்கு மட்டும் கொடுத்துள்ள ஒரே ஒரு கொடை அன்புதான்! அன்பு அரும்பொருள். அதனை இழந்தால் திரும்பப் பெறுவது கடினம். அன்பு, உள்ளத்தை உயிருடனும் உயிரை உடலுடனும் பிணைக்கும் ஒரு தளை. “அறிவு இறைவனைத் தேடுகிறது. அன்புதான் இறைவன் உறைவிடம் என்பதை அறிந்து கொண்டாரில்லை. அன்பு தான் வாழ்க்கைச் சட்டம்! அன்புடன் ஒன்றுவதுதான் விடுதலையும் முத்தியும்” என்றார் இராமதீர்த்தர்.

அன்புடையார் ஆன்மாவைத் தவிர மற்றொன்று அறியார். ‘மற்றொன்று அறியார்’ என்பது கடவுள் பக்தி முதல் சமூக வாழ்க்கை வரை பொருந்தும்.

மெய்யன்பு காட்டும் வல்லமை பெறவேண்டும். அதற்குத் தொண்டு செய்யவேண்டும். அன்புக்கு அரண் தொண்டு.

பொய்யைத் தவிர்த்தல், “யான்” இழத்தல், மெய்யன்பு காட்டுதல், சிவமும் அன்பும் தவிர மற்றொன்று அறியா திருத்தல், தொண்டு செய்தல் ஆகியன மேற்கொண்டு ஒழுகினால் திருவருள் சித்திக்கும். மாணிக்கவாசகர் “யானும் பொய்யும் புறமே போந்தோம்” என்றும், “புறம் போக லொட்டேன்” என்றும் பாடுகின்றார். ஆம்! புறம் போதலுக்கா பிறந்தோம்! மனித குலத்திலிருந்து புறம் போகமாட்டோம் என்று உறுதி கொள்வோம். அன்பால்