பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பாடில்லை! அந்த வேதங்களுக்கெல்லாம் நாயகனாகவும் வேதங்களையெல்லாம் கற்றறிந்தவனாகவும் விளங்கும் நான்முகனும் கண்டதில்லை. செல்வத்தின் தலைவன் திருமாலும் கண்டதில்லை. இறைவனை அறிவினாலும் பணத்தினாலும் காண இயலாது. இங்ஙனம் நான்மறைகளாலும் நான்முகனாலும் திருமாலாலும் காண இயலாத இறைவன் எளியேனை ஆண்டு கொண்டருளினர். ஆண்டு கொண்டருளியதுடன் தொண்டனாகவும் கொண்டருளிய அருளிப்பாட்டை என்னென்பது? அன்பு காட்டினால் போதாது; அருள் செய்தால் போதாது. வேலை- தொண்டு, செய்யப் பணித்தால்தான் உறவு ஆழம்படும்; உறுதிப்படும் என்று பேசுகிறார். ‘கூவிப் பணி கொள்’ என்றும், “எது எமைப் பணி கொள்ளுமாறு அது கேட்போம்” என்றும் அருளியுள்ளமையைக் கற்றுத் தெளிக.

தொண்டு செய்ய ஒருப்படுமின்! தொண்டராக விளங்குமின்! இறைவன், திருப்பெருந்துறையுறை சிவன் ஆட்கொண்டருளியதுடன் தொண்டனாகவும் கொண்டருளியதற்கு ஏது கைம்மாறு? இல்லை, இல்லை! அதனால் கைம்மாறு உண்டோ என்று நெஞ்சை நோக்கிக் கேட்கின்றார். நெஞ்சு, “இல்லை இதற்கு ஓர் கைம்மாறு” என்று கூறுகிறது.

கீழ்மையே செய்து கெடுக்கும் நெஞ்சத்தினை மாணிக்கவாசகர் தன் வசப்படுத்திக் கொண்டு திருப்பெருந்துறையுறை சிவன் புகழ் பாடும்படி செய்தது புகழ்மிக்க செயல்.

திருவாசகம் ஓதுதல் மூலம் நாளும் நமது நெஞ்சத்தைத் திருத்துவோம்! நம் வசப்படுத்துவோம்! இறைவன் புகழ் பாடிப் பரவுவோம். தொண்டு செய்வோம்! நம்மைச் சிவமாக்கி ஆட்கொண்டருளும் மாணிக்கவாசகர் திருவடித் தாமரைகள் போற்றி! அறிவு தந்து ஆட்கொண்டருளிய அற்புதத்தைப் போற்றுவோம்.