பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இறைவன் வன்முறையால் அணுகுவதில்லை. இறைவன் ஆன்மாக்கள் செய்யும் பிழைகளையெல்லாம் பொறுத்து ஆள்பவன். மேலும் பிழையெல்லாம் தவிர்த்தும் காத்து ஆள்பவன். பிழைகளைப் பொறுத்தலினும் பிழைகளைத் தவிர்த்தல் பேரறம் என்றும் நினைந்து நினைந்து போற்ற வேண்டிய உதவி. இறைவன் ஆன்மாக்களை ஆணவத்தின் ஆதிக்கத்திலிருந்து மெள்ள யாதொரு சுவடும், களங்கமும், கறையும், நோவும் இன்றி மீட்பதைப் “பையத் தாழுருவி” என்பார் மாணிக்கவாசகர். ஆதலால் இறைவன் சிவன், ஆன்மாக்களை மென்மையாக இன்ப வெள்ளத்தில் அழுத்தி ஆட்கொள்வதால் பூங்கழல்கள் என்றார்.

இங்குத் திருவடிகளைக் ‘கழல்’ என்றார். வெற்றிச் சிலம்படித்த திருவடிகளைக் கழல் என்று கூறுவது மரபு. ஆம்! எம்பெருமான் சிவனின் திருவடிகளை- கழல்கள், உயிர்களை ஆட்கொள்வதில் வெற்றி பெற்றவை. முப்புரம் எரித்து வெற்றி கொண்ட கழல்கள்! சிவன், காலத்தை வென்று விளங்கி ஊழி முதல்வனாக நிற்பவன். ஆதலால், சிவபெருமானின் திருவடிகள்- கழல்கள்!

சமயநெறிக் கோட்பாட்டின் அடிப்படையே பலருக்கு விளங்காதது. நம்மை- உயிர்களைக் கடவுள் படைத்தான் என்றே பலரும் கருதுகின்றனர். ஏன் சில சமயங்கள் அப்படியே கூறுகின்றன. நம்மை- உயிர்களைக் கடவுள் படைத்தான் என்பது அறிவியல் முறையிலும்கூட இசைந்துவாராது. கடவுள் பரிபூரணன்; குறைவிலா நிறைவு; கோதிலா அமுது; குறையிலிருந்து நிறை தோன்றலாம். இது பரிணாம வளர்ச்சி. நிறையிலிருந்து குறை தோன்றாது. ஆன்மாக்களுக்கு உள்ள குறைகளை நோக்கின் கடவுள் படைத்திருப்பான் என்று சராசரி அறிவுகூட ஒத்துக் கொள்ளாது. ஆதலால் உயிர்களுக்குப் பிறப்பும் இல்லை; இறப்பும் இல்லை. உயிர்கள் என்றும் உள்ளவை (Existence) “எல்லா உயிர்க்கும்