பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அது எதிர்மறை அணுகுதலை ஏற்காது. ஆதலால் உயிர்களின் மனமறிந்து மனத்துள் இருக்கும் கருத்தறிந்து அக்கருத்தினை முடித்து வைத்தே ஆட்கொண்டருள்கின்றான் இறைவன். ஆன்மாக்கள் புறத்தே போனாலும் உடன் வருவான். துரிசுகள் செய்தாலும் உடந்தையாக இருப்பான். முடிவான நிலை ஆட்கொண்டருளுதல்; ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்துதல்; இறவா இன்ப அன்பில் திளைத்திடச் செய்தல். உயிர்களை ஆட்கொண்டருளுதலால் ‘பொன்மலர்’ என்று போற்றுகின்றார்.

தைநீராடல் தமிழ் மரபு. காலப்போக்கில் மார்கழி நீராடல் ஆயிற்று. வைகறையில் மார்கழி நீராடல் பழந்தமிழர் காலம் தொடங்கி இன்றுவரை நிகழ்ந்து வருவது.

வாழ்க்கைப் பொழுதில் வைகறைப் பொழுது நல்ல பொழுது. வைகறைப் பொழுதில் ஆற்றல்மிக்குடைய ஓசோன் உலாப்போதரும். வைகறைப் பொழுதில் சுவாசிக்கும் ஒரு மூச்சு பத்து மூச்சுக்குச் சமம். மூச்சு சுவாசிக்கும் எண்ணிக்கை அடிப்படையில்தான் வாழ்நாள் கணிக்கப்படுகிறது. வைகறையில் எழுந்து நடந்து சுவாசித்தால்- ஒரு தடவை சுவாசித்தால் ஒன்பது மூச்சு மிச்சப்படுத்தலாம். அந்த அளவு வாழ்நாள் வளரரும். வைகறைப்பொழுதில் நீர் நிலைகளில் ஒசோன் படிந்து அந்தத் தண்ணீர் மிகுதியும் பயன் தரத்தக்க ஆற்றலுடையதாக விளங்கும். அப்போது நீராடல் உடலுக்கும், உயிருக்கும், உணர்வுக்கும், பத்திமைக்கும் மிகுதியும் பயனளிக்கும். ஆதலால் பயன் நோக்கி மார்கழி நீராடலையும் ‘போற்றி’ என்றார்.

இந்தப் பாடலில் இறைவனின்- சிவனின் தனித்தன்மை போற்றப்படுகிறது. ஐந்தொழிலுக்கும் சிவனே உரியவன். சிவனே முழு முதல்வன். சிவனை அறிவாலும் செல்வத்தாலும் காண இயலாது. அன்பினாலும் தொண்டினாலுமே காணலாம் என்பது பெறப்படும் உண்மை! சிவன்-