பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

226

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அதற்காகப் பலகாலும் காத்திருக்கவேண்டிவரும். அதுமட்டுமின்றி, கொக்கு ஆற்றங்கரையில் பெரிய மீனுக்காகக் காத்திருக்கிறது. பெரிய மீன் கிடைக்குமளவு இரவுபகல் என்று பாராமல் காத்திருக்கின்றது. காற்று, வெயில் மழை, இன்னபிற இயற்கைத் துன்பங்களை ஏற்றுப் பொறுத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறது. அதுமட்டுமா? அந்தக் கொக்கையே கொல்லும் பகை மனிதனும் நடமாடுகிறான். அவனுடைய குறியிலிருந்தும் அது தப்பி, இடம்மாறித் தற்காத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறது. அதுபோலவே, இறைவனுடைய திருவருளைப் பெற்று ஆரத் துய்க்க வேண்டும் என்று விரும்புகிற ஆன்மா இரவு பகல் என்று பாராமல், முயற்சிக்கவேண்டும். மாணிக்கவாசகர் கங்குல் பகற்பொழுது எல்லாம் கரைந்து அழுது திருவருளைப் பெற முயற்சித்தார். திருவருள் பெறும் முயற்சியில் உலகும், உலகியலும் தீராத் தொல்லைகள் தரும். அத்துன்பங்களையும் இன்பமாகக் கருதி ஏற்றுக்கொள்ளாவிடில் திருவருட்பேறு சித்திப்பதில்லை. மேலும், எப்படி கொக்கையே சுடும்மனிதன், நடமாடுகிறானோ அப்படியே நம்மையே தன்னுணர்வளித்து நெறியல்லா நெறிதன்னில் பயின்று மூர்க்கராகி முதலிழந்து அழியச் செய்யும் பொறிகளும் புலன்களும் பகை காட்டுகின்றன. மாணிக்கவாசகர் தாம் இப்படி அலைக்கப்பட்டதாகத் தம்மீது ஏற்றிக் கூறுகின்றார். ஒன்றைப் பெறாமையினால், துன்பம் உண்டாக வேண்டும். அத் துன்பத்தினால் நாம் வாடுதலும் வேண்டும். அப்பொழுது தான் பெறாமைக்குரிய காரணங்களை நீக்கி, பெறுதற்குரிய முயற்சிகளைக் கவலையுடனும் அக்கரையுடனும் மேற்கொள்ள முடியும். ஆதலால், இறைவனுடைய திருவருளைப் பெறாது அல்லற்படுபவர்கள் அதற்காகத் துக்கப்பட வேண்டும்; வாடுதல் வேண்டும். மாணிக்கவாசகர் இப்படித் துக்கித்தார் - வாடினார் என்பதை அவருடைய நூலாகிய திருவாசகமே நமக்குணர்த்தும். இரைதேர் கொக்கொத்து இரவுபகல்