பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


குறிப்பிடுகின்றார். அறியாக் குழந்தையின் தவறைத் தாய் திருத்திப் பாதுகாப்பது போல பொய்யிலங்குகின்ற தன்னை இறைவன்தான் பாதுகாக்க வேண்டும் என்றும் சொல்லுகின்றார். ஒரு தாய் குழந்தைக்கு உவப்பான பொருள்களைக் குழந்தைகளிடத்துக் கொடுத்தும், அனுபவிக்கச் செய்தும், அழிவு வராமல், அனுபவம் இடையறாமல் பாதுகாத்து அனுபவிக்கச் செய்வது போல தனக்கு இறைவன் வழங்கிய திருவருளின்பத்தை இடையறாமல் அனுபவிக்கும்படி செய்து பாதுகாக்க வேண்டும் என்றும் விண்ணப்பிக்கின்றார். எவ்வளவு அழகான உவமை!

ஐயோ பாவம்!

ஒரு சிலருக்குப் பிறப்பின் சார்பினாலே பெருந்தன்மை பெருங்குணம் முதலியன இயல்பிலேயே அமைந்து கிடக்கின்றன. ஒரு சிலர் மேற்கூறிய நல்லியல்புகளைப் போராடிப் பெறுவார்கள். இன்னும் ஒரு சிலர் அற்பத்தனத்திலேயே பிறந்து அற்பத்தனத்திலேயே வாழ்ந்து வாழ்ந்து, அற்பத்தனத்திலேயே வாழ்க்கையை முடித்துக் கொள்ளுவார்கள். அவர்கள் சிறியவர்கள்-அற்பர்கள். அவர்களுக்கு-இக்கடை இனத்தார்க்கு நலன் தெரியாது; அவர்கள் நலன் நினைக்க மாட்டார்கள்; நலன் செய்யமாட்டார்கள். ‘சிறுமை பொருந்திப் பெருமை முடங்கிக் காட்சி தருவார்கள். செயலற்று அற்பமாக ஏமாற்றியும் புறம் சொல்லியும் வாழ்வார்கள். ஆக்கத்தில் வாழத் தெரியாமல் அழிவில் ஆதாயம் எடுப்பார்கள். எரிகின்ற பிணத்தை நரி பிடுங்குவது போல, இத்தகையோர் பரிதாபத்திற்குரியவர்கள். இந்த வரிசையைச் சார்ந்த மக்களை மாணிக்கவாசகர் ஒரு சிறந்த உவமையால் விளக்குகின்றார்.

கடலில் தண்ணீர் நிறையக் கிடக்கின்றது - நாய் நிற்பதோ கடற்கரை. நாய்க்கு மிகுதியான நீர்வேட்கை, நாவறண்டு தொங்க அது நீரைத் தேடிக் கடற்கரைக்கு வந்தது.