பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசக உவமைகள்

241


காட்டுகிறார்-பிறர்மீது வைத்துக் காட்டவில்லை-தன்மீதே வைத்துக் காட்டுகிறார். இஃது ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோரின் இயல்பு. அடியவர்கள் தம்மையுடைய தலைவனை-சிவபெருமானை நினைந்து உருகிக் காதல்மீக் கூர்ந்து அவனடியை நாடுகிறார்கள். ஆனாலும் அறிவிலாத மனிதனோ, தன்னையுடைய தலைவனை உணராமையின் காரணமாக அன்பு காட்டுவதில்லை. தலைவனை நாடிச் செல்வதில்லை. இறைக்கும் கிணறு ஊறுவதுபோல அன்பு காட்டுதலே அன்பைப் பெற்றுத் தரும்.

இங்ஙனம், தன்னுடைய தலைவனை ஏத்தி வாழ்த்தி வாழத்தெரியாத மனிதனை ஊர் நாய் என்று ஏன்? ஊர் நாயினும் மோசமானவன் என்றும் திருவாசகம் கூறுகிறது.

நாய்ப் பிறப்பு இழிவான பிறப்பு. எனினும் தனிப்பட்டவர்களுடைய வளர்ப்பால்-அரவணைப்பால் அது நலமாக வாழும். இன்பமாக இருக்கும். பாற்சோறும் பஞ்சணையும் பெறும். வளர்ப்பவரின் விருந்தினர்கள் தட்டிக் கொடுத்துத் தகுதியுண்டாக்குவார்கள். அவர் தம் வீட்டுக் குழந்தைகள் கொஞ்சிக் குலாவுவர். இத்தனை அரிய வாய்ப்புக்களையும் இழக்கும், வளர்ப்பார் ஒருவர் இன்றித் தானே வளர்ந்து வாழும் ஊர் நாய். ஊர் நாய் நற்சோறு உண்ண முடியாது. காரணம், போடுவார் இல்லை. அதனால் இழிந்த கழிவுப் பொருட்களை உண்டு வாழும் ஈனநிலை ஏற்படுகிறது. ஆன்மாவும் தக்க அறிவு தந்து நல்லாற்றுப்படுத்தும் தலைவன் இன்மையின் காரணத்தால் மும்மலத்திற் கிடந்து உழலும்; மும்மல வழிப்பட்ட உணர்வுகளைப் புசிக்கும்.

தக்க ஒருவரின் பாதுகாப்பின்மையால்தான் ஊர் நாயை எல்லோரும் அடிப்பர். ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்க நாதியில்லை. சட்டப்படிகூட கேட்க முடியாது. அதுபோல உற்றுழி உதவி உறுதுணையாக நின்று