பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசக உவமைகள்

243


எந்தக் கட்டத்திலும் அவன் பலரின் உதவிகளைப் பெற்றே வாழுகிறான்-வாழவேண்டியவன். அதனால் அவன் நன்றி காட்ட வேண்டியவனாக இருக்கிறான். ஆனால் அவன் நன்றி காட்டுவதில்லை. காரணம், அவன் ஊர் நாயினும் தரங் கெட்டவனாகத் தரணியில் உலவிக்கொண்டிருக்கிறான்.

ஊர் நாய் ஊரைச் சுற்றிக்கொண்டேயிருக்கும். நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டே இருக்கும் பயன் என்ன? நாலு எச்சில் இலையை நக்கிப் பார்க்கும்-தன் இனத்தைச் சார்ந்த வேறு நாய்களோடு தேவையின்றிக் குரைத்துக் கடித்தும் கடிப்பட்டுவரும். அது போலவே, சிவச்சிந்தனை இல்லாத மனிதர்கள் ஒன்றிய சிந்தனையில் திளைக்காமல்-உறுதியான தொண்டுகளில் ஈடுபடாமல் ஊரைச் சுற்றுவர்-உடம்பாலும் சுற்றுவர்-உள்ளத்தாலும் சுற்றுவர். பயன் என்ன? வம்பளத்தல்-தீமொழி பேசல்-கலகம் விளைவித்தல்-கேவலமான முறையில் வயிற்றைக் கழுவிக் கொள்ள நான்கு காசு கிடைக்காதா என்று ஏங்கி நிற்றல் ஆகியனவேயாகும்.

வளர்ப்பு நாய் அருமையாகக் குரைக்கும். காரணத்தோடு குரைக்கும்-கள்வரைக் காட்டிக் கொடுக்கும். ஆனால் ஊர் நாயோ எப்பொழுதும் குரைக்கும். அச்சத்தாற் குரைத்துக் கொண்டே இருக்கும். அதுபோல் திருவருட் சிந்தனையில்லாதவர்கள்-உறவில்லாதவர்கள் நிறையப் பேசுவர்-பயனற்ற சொற்களையே பேசுவர்-பகைகாட்டும் சொற்களையே பேசுவர்-அச்சத்தினால் பேசித் திரிகுவர்-ஆனால் ஒரு பயனும் காணார்.

நாய் இயல்பாக அறிவில்லாதது. அறிவிடைச் செயல்கள் செய்யும் ஆற்றல் இயல்பில் இல்லை. ஆனாலும் அது ஒரு வளர்ப்பு நாயாக இருந்தால்-வளர்ப்பவர்கள் முறையாக வளர்த்தால் சொன்னதைக் கேட்கும், செய்யும்! அறிவோடு தொடர்புடைய காரியங்களை கூடச் செய்யும்