பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

சமுதாயக் கண்ணோட்டத்தின் மதிப்பீடு இது.

அடிகளாரின் கருத்துக்களை இந்நூலில் நாம் காண்கிறோம். இந்நூலைப் படிப்பவர்கள் அத்துடன் நின்று விடுதல் ஆகாது. அடிகளார் கருத்தின் வழியில் நின்று அடிகளாரைத் திறனாய்வு செய்தல் வேண்டும். அவ்வகையில் அடிகளாரைத் திறனாய்வு செய்தால் அங்கே ஒரு புத்தம் புதிய சமுதாய ஒளி பிறக்கும். அந்த ஒளியில் சமுதாயக் கருணை என்ற அருவியானது பெருக்கெடுத்தோடும். அத்தகைய அருவிப் பெருக்கில் அறியாமை வழிப்பட்ட தத்துவம், சமயம், நீதி ஆகிய அனைத்தும் அழிந்து, சமுதாய மறுமலர்ச்சிச் சோதியமைந்த தத்துவம், சமயம், நீதி ஆகியவை வெளிப்பட்டுத் தோன்றும்.

சமுதாயக் கண்ணோட்டம் மலர்ந்த நிலையில் அடிகளார் செய்த புரட்சி ஒன்றை எடுத்துக்காட்டி இவ்வணிந்துரையை நிறைவு செய்கிறேன்.

“பேறு, இழவு, இன்பமோடு பிணி, மூப்புச் சாக்காடு என்னும் ஆறும் முன் கருவுட்பட்டது” என்பது சிவஞான சித்தியார் தொடர்.

ஊழ்வினையினால் வருவது பிணி. இதனை அறுதியிட்டுக் கூறியது சிவஞான சித்தியார்.

“நோய் இயற்கையன்று; நோய்க்குப் பழவினைகள் காரணமல்ல; நோய் செயற்கை; நோய் வரவேற்றுக் கொள்வது”. நோய்க்கும் இவன் புதியவனே; அவை நாடி உண்டமை; உழைப்பில்லாத வாழ்க்கை; தூய்மையற்ற உடல்; தூய்மையற்ற மனம்; கெட்ட புத்தி, அறியாமையின் இரும்புப் பிடியில் சிக்கிய ஆன்மா. இவையெல்லாம் நோய்க்குக் காரணங்கள்” (பக்கம் 121)

இது எழுத்துருவம், ஆனால் இக்கருத்தானது அடிகள் பவளவாய் மூலம் ஒலியாக வெளிப்பட்டபோது யான் உடனிருந்தவன். பின்னர் அடிகளுடன் யானும் கவிஞர் பரமகுருவும் காரில் சென்றோம். வழியில் நோய் பற்றிய பேச்சு வந்தது. யான் மேலே கண்ட தத்துவ வரியை எடுத்துக் காட்டினேன். சிறிது நேரம் அமைதியாக இருந்த அடிகள், ‘தத்துவ வரியில் உள்ளது பிணி, நான் குறிப்பிட்டது நோய்’ எனறாாகள்.

என்னுடையது தத்துவஞானம். அடிகள் பார்வையானது தத்துவக் கண்ணோட்டம்.