பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வலிவுபெற்ற ஒரு சொல். இறைவன் எங்கணும் தங்கியிருக்கிறான். எல்லாப் பொருள்களுக்குள்ளும் இருக்கின்றான். எப்போதும் இருக்கிறான். இந்த அருமையான இறைவன் கலந்துறையும் காட்சியைக் காண்பவர் சிலரே. காணப் பெறாதவர் பலர். ஏன்? பலர் காணமுயற்சிப்பது கூட இல்லை. அங்கனம் காண முயற்சிக்காதவர்களில் சமய நெறியைச் சார்ந்தோரும் உண்டு-சாராதவர்களும் உண்டு. சமயநெறியைச் சார்ந்தோரினும் பலர் இந்த உண்மையை மறந்துவிட்டு வெறும் ஆரவாரத் தன்மையுடைய-சமயம் போல் தோற்றமளிக்கக் கூடிய சடங்கு நிகழ்ச்சிகளிலேயே ஆர்வமும் அக்கறையும் காட்டுகின்றனர். எல்லா உயிர்களிடத்தும் இறைவன் நீங்காதுறைகின்றான் எனக்கருதி அன்பு காட்டும் இயல்பை மறந்து விடுகின்றனர்-மாறாக தீமையும் புரிந்தொழுகுகின்றனர். கள்ளுள்ள மலர்களிலெல்லாம் நிச்சயமாக வண்டுகள் வந்து தங்கும். அதுபோல அன்புடைய மனிதர்களிடத்திலெல்லாம் இறைவன் வந்து தங்குவான் என்ற குறிப்பையுணர்த்த “கள்ளும் வண்டும் அறாமலர்க் கொன்றையான்” என்று குறிப்பிடுகின்றார் மாணிக்கவாசகர். மது நிறைந்த மலரும் வண்டும் பிரிக்கப்படாதன. அதுபோல அன்பு சார்ந்த மனிதனும் கடவுளும் பிரிக்கப்படாதவர்கள். மேலும், இறைவன் எந்த இடம் என்று வரையறுத்துக் கூற இயலாவண்ணம் நடு, கீழ்மேல் ஆகிய எல்லா இடங்களிலும் கலந்து உறைகின்றார். அது மட்டுமல்ல - யாவுள்ளுந் தங்கியிருக்கிறான் என்றும் குறிப்பிடுகின்றார். யாவுளும் என்பதனால் உயிரின வேறுபாடின்றி, இழிவு உயர்வு வேறுபாடின்றி கலந்து உறைகின்றான் என்பது பெறப்படுகிறது. இந்தக் கருத்தை விளக்க எள்ளும் எண்ணெயும் போல என்ற உவமையை எடுத்தாளுகின்றார். எள்ளுக்கு எண்ணெய் இடவேறுபாடின்றி, ஒன்றித்து இருக்கிறது. உள்-உலகம் உலகப் பொருள்கள். எண்ணெய்-இறைவன் எள்ளினுள் எண்ணெய் கலந்திருந்தாலும் வெளிப்