பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எவ்வித உணர்வுமின்றிப் பிறக்கிறான். பின் வையகத்தில் படிப்படியாகத் தேறி வளர்ந்து ஒழுக்க நெறிகளை ஏற்றுக் கொள்கிறான். இதுதான் இயற்கை. ஆனால் பிறப்பிலேயே கீழ்ச்சாதி, மேற்சாதி என்று மானுட சாதியைப் பிரிப்பது ஆற்று வெள்ளத்தில்-தம்மை அகப்பட்டாரை விழுங்கும் சுழியை ஒத்தது, என்று மாணிக்கவாசகர் உருவகம் செய்து கூறுகின்றார்.

ஆற்றிடைச் சுழியில் அகப்பட்டவர் தடுமாறுவதைப் போலத்தான் சாதிகுலம் பிறப்பு என்னும் வேறுபாட்டில் சிக்கித் தவிக்கும் சமுதாயமும் தடுமாறும். சாதி வேற்றுமைகளின் காரணமாகப் பகை வளர்ந்தமையால் அணைத்து ஆதரவு தரவும் யாரும் இல்லை. ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழவேண்டிய சமுதாய அமைப்பு ஆதரவுகளை இழந்து அல்லற்பட்டு உழல்கிறது. இன்று எங்கு பார்த்தாலும் சாதிகளைக் காப்பாற்றும் போராட்டங்கள்! சாதிகள் வழிக் கலகங்கள்! திருக்கோயில் திருவிழாவிலிருந்து தேர்தல் வரை சாதி வெறி இடம் கொள்கிறது. ஆண்டவன் வாழும் ஆலயத்திலிருந்து அந்தணர்கள் வாழும் திருமடம் வரை சாதி முறைகளே இடம் பெற்றுள்ளன. இதனால் உயர் நெறிகள் பற்றி உபதேசங்கள் பெருகினாலும் உயர் நெறிகள் இடம் பெறவில்லை. மானிட சமுதாயத்தை என்புறுக்கி நோயென அழித்து வரும் இந்தச் சாதிப்பேயிலிருந்து சமுதாயத்தை மீட்பதுதான் மாணிக்கவாசகர் தந்த திருவாசக நெறி.

“சாதிகுலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு
பேதைகுணம் பிறருருவம் யானெனதென துரைமாய்த்துக்
கோதிலமு தானானைக் குலாவுதில்லை கண்டேனே!”

என்பது மணிமொழி.

இரண்டாவதாக மானிட சமுதாயத்தை வருத்தும் துன்பம் வறுமை. மாணிக்கவாசகர் தம் அளவில் மாசிலாத்