பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15


அடிகளாரின் சிந்தனையை எழுத்துருவில் தமிழ்ச் சமுதாய உலகத்துக்குப் பத்துத் தொகுதிகளாக அமைத்துத் தந்தவர்கள் தமிழவேள் ச. மெய்யப்பனார் அவர்கள். அவர்களும் யானும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இணைந்து பணியாற்றியவர்கள். அவர்களுக்கு ஆயிரம் பெருமைகள் உண்டு. ஆயினும் உலகமளந்த மேன்மைத் தமிழைத் தம்முடைய வாழ்வியலாக அமைத்து வாழ்ந்த தமிழமுது முனைவர் வ.சுப. மாணிக்கம் அவர்களால் தமிழுலகத்துக்கு - தமிழ்த் தொண்டுக்கு இவர் என்று சுட்டிக் காட்டப்பெற்ற பெருமை ஒன்றே சிறந் பெருமை.

அதேபோல் இந்நூலுக்குரிய தனிப்பெருமை இன்னொன்றும் உண்டு. அடிகளாரின் சிந்தனை ஓட்டம், எந்த எந்த வழித் தடங்களில் சென்று எங்கே நிறைவுபெறும் என்ற முறைமையை முறையுறத் தெரிந்த மரு. பரமகுரு அவர்கள் பதிப்பாசிரியர் குழுவில் இருப்பதுதான்.

நூலுக்கு அணிந்துரைதான் எழுத முற்பட்டேன். ஆனால் அது ஆய்வுரையாக மலர்ந்து விட்டது.

சைவத் தமிழுலகம் கொள்ளுவன கொண்டு தள்ளுவன தள்ளுக. எவ்வாறாயினும் அடிகளின் நூல் வரிசையானது தமிழகத்தின்-தமிழ்ச் சமுதாயத்தின், பண்பாட்டின்-சமயத்தின் வரலாற்றுக் களஞ்சியம் மட்டுமன்று; வாழ்வியல் நெறி காட்டும் வற்றாத கொள்கைக் கருவூலம் என்று கொண்டு போற்றுவது தமிழ்ச் சமுதாயத்தின் கடமை.

வாழ்க அடிகளாரின் சமுதாயச் சிந்தனைக்
கண்ணோட்டம்.
வளர்க ‘என்றும் வேண்டும் இன்ப அன்பு’ என எழுதி
முடிக்கும் அடிகளாரின் தொண்டுள்ளம்.