பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஞானப்பனுவல்

261


போது—தமது புகழுக்கும் மரியாதைக்கும் இழுக்கு நேராத போது அன்புடையவர்களாக இருப்பார்கள். அதில் ஒன்றும் சிறப்பில்லை. ஆதாயத்திற்கும் புகழுக்கும் மரியாதைக்கும் இடையூறு நேர்ந்தபோதும், அவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு அன்புடையவராக வாழ்தலே சிறப்பாகும். அதுதான் சமய வாழ்வு. புகழையும், பயனையும் எதிர் பார்த்துச் செயற்படுவது சமய வாழ்வு ஆகாது.

திருவாசகத்தை ஓதுகின்றவர்கள் உள்ளத்தில் அது ஓர் ஒலியை உண்டாக்குகிறது. அந்த ஒலி ஒரு பெரும் புரட்சியை உண்டாக்குகிறது. அது நம்மைப் பற்றிச் சிந்திக்க செய்கிறது. நம்மிடத்தே இருக்கும் குறைகளையும் நிறைகளையும் அது காட்டுகிறது. பொதுவாக, சராசரி மனிதனும் குறையைச் சுட்டிக் காட்டுவான். குறைகளைச் சுட்டிக்காட்டி, அக்குறைகளைக் களையும் வழிகாட்டி, நிறையையும் காட்டுபவன்தான் சிறப்புடையவன், நோயாளியைக் கேட்டால் அவனே கூறி விடுவான் தனக்கு இன்ன நோய் என்று. நோயைக் கூறுவதோடு நோய் நீக்கும் மருந்தையும் கூறுகிறவன் ‘மருத்துவன்’ எனப்படுவான். இதனாலேயே மாணிக்கவாசகர், ‘குறைவிலா நிறைவே கோதிலா அமுதே!’ என்று இறைவனைப் பாராட்டுகிறார். மாணிக்கவாசகர், ஆன்மாவைப் பிடித்தாட்டும் நோய்காட்டி, அந்நோய் அகன்றொழிய மருந்தும் காட்டினார்.

திருவாசகத்தில் நமது ஆன்மா தோயத் தோயச் சில இரசாயன மாறுதல்கள் ஏற்படும். திருவாசகத்தில் நமது சித்தத்தை ஊறப் போட்டால், ஊறிய பிறகு, ஒரு சிறந்த அற்புதம் நிகழ்கிறது.

ஊறுகாயை நாம் அறிவோம். ஊறுகாய்க்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. காய் நன்றாக ஊறிய பிறகுதான் அது ஊறுகாய் என்று பெயர் பெறுகிறது. ஊறுகாய், நாம் உண்ட பெருந்தீனியை—கடினமான உணவைச் செரிக்க வைக்கும். எனினும், தன் மணம் சிறிதும் குன்றாமல் கமழ்ந்து