பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொண்டிருக்கும். அது போலவே, நமது உள்ளத்தை — ஆன்மாவை திருவாசகத்தில் ஊறச் செய்துவிட்டால் நம் தீய வினைகள் அனைத்தும் செரிக்கும்—திருவாசகத்தின் செம்மணம் கமழும்!

சித்தத்தில் நாள் தோறும் அன்பு மலர வேண்டும். சிவபெருமானின் திருவருளைப் பெற்றுத் தரும் சாதனம் அன்புதான். அந்த அன்பை நெகிழச் செய்வதற்குரிய சாதனம்தான் வழிபாடு. வழிபாடு நிகழ்ந்து அகத்தே அன்பு நெகிழவில்லையானால் அந்த வழிபாட்டால் எத்தகைய பயனும் இல்லை. இறைவனிடத்து அன்பு செலுத்த-அவன் நாமத்தை உச்சரித்து, அவன் திருவடிப் போதுக்கு நறுமண மலர் சூட்டித் திருவடிக் கமலங்களில் நீர் ஊற்றுதல் போதும். ‘யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை’ என்றார் திருமூலர். பூவும், இலையும், நீரும் தூய்மையானவை. இன்று திருக்கோயில்களில் பூவும் இலையும், நீரும் வாணிகப் பொருள்களாகிவிட்டன. பூவையும், இலையையும் காசு கொடுத்து வாங்காமல் அவற்றை நாமே உற்பத்தி செய்ய வேண்டும். புண்ணியப் பொருள்களான பூவும் நீரும் இறைவனுக்கு நிறையக் கிடைக்கக்கூடிய சூழலைத் தமிழகக் கோயில்களில் உருவாக்க வேண்டும். மாசில்லாத எண்ணத்தோடு, சீல முடைய-மிக்குயர்ந்த நம் நெறியை மக்களிடத்துப் பரப்ப முற்பட வேண்டும். இதனால் வருகிற இன்பதுன்பங்களைப் பற்றிக் கவலை கொள்ளக்கூடாது. மெய்யடியார்கள் வினையைப் பற்றியும் அவ்வினைவழி வரும் துன்பங்கள் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். ‘முத்தர் மனமிருக்கும் மோனத்தே’ என்பதுபோல அவர்கள் இறைவன் திருவடி நீழலையே எப்போதும் சிந்தித்திருப்பர். தம்மினின்றும் மாறுபட்டவர்களிடத்தும் அவர்கள் அன்பாகவே நடந்து கொள்வார்கள். அவர்களைப் போல நாமும் நம்மினின்றும் மாறுபட்டவர்களிடத்து தூய அன்பு காட்ட வேண்டும். அவர்களுக்காக நாம் ஆத்மார்த்தீகமாகப் பிரார்த்தனை