பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஞானப்பனுவல்

263


செய்து அவர்களையும் நம் வழிக்குத் திருப்பிக் கொணர்தல் வேண்டும். நம்மை நோக்கி வருகிற துன்பங்களைக் கண்டு நாம் சோர்ந்துவிடக் கூடாது. பற்றை விட்டால் துன்பமில்லை என்பார்கள். ‘பற்று விடுதல்’ என்றால் ‘பற்றை ஒழித்துவிடுதல்’ என்பது பொருளல்ல. பற்றை வேறு திசையில் திருப்பிவிட வேண்டும். இதற்கு மடை மாற்றுதல் என்று பெயர். நமது தேவைகள் பிறருக்கும் உண்டு என்று கருதித் திசை மாற்றிவிட வேண்டும்.

அகங்கனிந்த அன்போடு திருவாசகத்தை ஓதுகிற பண்பு ஏற்பட்டால், நாம் உயர்வும் உய்தியும் பெறுவோம். திருவாசகத்தை ஓதியுணர்ந்து அழ வேண்டும். அவ்வாறு அழுதால் இல்லங்கள் தோறும் எழுந்தருளிப் பொற்பாதம் காட்டும் இறைவனை-குறித்த காரியத்தைக் குறித்த நேரத்தில் செய்து முடிக்க வல்லானை நாம் நமது சேவகனாகப் பெறலாம். ஆம். இறைவன் ஏவல் செய்வான். அவன் நமக்கு ஞானம் தருவான்-சீலம் தருவான்-எல்லா நலன்களும் தருவான். அவனை நாம் பெற, அவன்பால் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க வேண்டும்.