பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாட்டும் பொருளும்

265



மகா வித்துவான் தியாகராசச் செட்டியார் அவர்களை, திருவாசகத்திற்கு உரை எழுதக் கேட்டு வற்புறுத்தியிருக்கிறார்கள். அவர் “திருவாசகத்திற்கு உரை எழுத இயலாது, திருவாசகம் ஒரு ஞானபனுவல், ஞானானுபவ நூல், ஞானானுபவ பூதி நூலுக்கு உரை காண்பது கடினம், கூடாது. மேலும் எழுத வற்புறுத்தினால் “காவிரியில் விழுந்து உயிர் நீத்து விடுவேன்” என்று கூறினார். ஆனாலும் பிற்காலத்தில் திருமுறைகளுக்கும் உரைகள் சிலர் எழுதியுள்ளனர். வெளிவந்துள்ளன.

“தில்லை பாதி-திருவாசகம்பாதி என்பது ஆன்மீகப் பழமொழி. தில்லை, திருவாசகத்திற்கு உரிய இடம், ஆடல் வல்லான்-நடராசப் பெருமான் விரும்பிக் கேட்ட, விரும்பி எழுதிய பாடல்கள் திருவாசகப் பாடல்கள், இதனைச் சிவப்பிரகாச சுவாமிகள்...

“...............
திங்கள் வார்சடைத் தெய்வ நாயகன்
ஒருகலை யேனும் உணரான் அஃதான்று
கைகளோ முறிபடுங் கைகள் காணில்
கண்களோ ஒன்று காலையிற் காணும்
மாலையில் ஒன்று வயங்கித் தோன்றும்
பழிப்பின் ஒன்று விழிப்பின் எரியும்
ஆயினும் தன்னை நீ புகழ்ந் துரைத்த
பழுதில் செய்யுள் எழுதினன் அதனால்
புகழ்ச்சி விரும்பினன் போலும்
இகழ்ச்சி யறியா என்பணிவானே”

என்று நயம்படக் கூறி விளக்குகிறார். திருவாசகத்தைப் பிரதி எடுத்தவன் ஆடல் வல்லானேயாம். “ஏன், பிரதி எடுத்தான்? கடையூழிக் காலம் வரும் அல்லவா? அதாவது புலனங்கள் அனைத்தும் ஒடுங்கும் காலம்- யுகாந்தரம் என்று சொல்லப் பெறும் கடையூழி. அந்தக் கடையூழிக் காலத்தில் ஒன்றும்,

கு.இ.VIII.18.