பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாட்டும் பொருளும்

267


“நின்றபுகழ்ப் பூலியூரர் நேயமுடன் புடைசூழச்
சென்றருளுக் கிடமான செம்பொனின் அம்பலம் எய்தி
ஒன்றிய இத் தமிழ்மாலைப் பொருள் இவர் என்று உரை செய்து
மன்றத்தினிற் கடிதேகி மறைந்தனர்; அங்கு அவர் காண”

என்பது திருவாதவூரடிகள் புராணம். சிற்சபையின் பெருமையைப் போற்றும் பொழுதும்...

“தற்பரமாய்ப் பரபதமாய்த் தாவில் ‘அனுபூதியதாய்
அற்புதமாய் ஆரமுதாய் ஆனந்த நிலைய ஒளிப்
பொற்பின்தாய் அறிவறிதாய்ப் பொருளாகி அருளாகும்
சிற்பரம் ஆம் அம்பரம் ஆம் திருச்சிற்றம்பலம் போற்ற...”

என்று போற்றுவர். இப்பாடலில் “பொருளாகி அருளாகும்” என்று வரும் சொற்றொடர் அளவு நோக்குக.

கல்வியின் பயன் இறைவனின் திருவடிகள்! இறைவனின் திருவடிகளை அறிதலே ஞானம். இறைவனின் திருவடிகளைப் பற்றெனப் பற்றுதலே திருவடி ஞானம்! திருவடிப் பேற்றினை அடைதலே வீடு பேறு. பாட்டின் பொருளாக நாம் அடைவது திருவடி ஞானம்! திருவாசகத்தின் பொருள் திருச்சிற்றம்பலத்தில் நட்டமாடும் எப்பெருமானின் திருவடிகளே! அந்தத் தூக்கிய திருவடியே நமது சாதனம்; பொருள்! திருவாசகம் ஓதுவோம் இருள்மலம் கரைத்திடுவோம்! ‘யான்’ ‘எனது’ என்னும் செருக்கினை அகற்றிடுவோம்! ஆடல் வல்லானின் எடுத்த திருவடியே வாழ்க்கையின் பொருள். பாட்டின் பொருள் என்று போற்றி வாழ்வோம்! இன்ப அன்பினை எய்துவோம்.