பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழும் நெறி

269


தாய்மாரும் ஒன்றுப் போலத் தம் குழந்தைகளிடம் அன்பு காட்டுவதில்லை. அன்பிலும் தரம் இருக்கிறது. தாய்மார் தம் குழந்தைகளிடம் காட்டும் அன்பினில் தரப்பாகுபாடு இருக்கிறது. ஒரு சில தாய்மார் குழந்தை அழுதாலும் கவனிப்பதில்லை. அலட்சியப் போக்குடன் இருப்பர். இவர்கள் தாய்மாரே அல்லர். ஒருசில தாய்மார் குழந்தை அழுதவுடன் பாலூட்டுவார்கள் இவர்கள் பரவாயில்லை! ஒரு சில தாய்மார் குழந்தைக்குப் பசிக்குமே என்று நினைந்து அழத் தொடங்கு முன்பே உரிய காலத்தில் பாலூட்டி விடுவார்கள். இவர்கள் நற்றாய்மார். ஆனால் இறைவனாகிய தாய், நினைந்து ஊட்டுவதில்லை, மறப்பு என்ற ஒன்றினைத் தொடர்ந்து வருவது நினைப்பு. இறைவன் உயிர்களை மறப்பதே இல்லை. அதனால் இறைவனாகிய தாய் நினைந்து ஊட்டும் தாயினும் சிறந்து விளங்குகின்றான்.

ஒரு தாய் தன்னுடைய மக்களை நல்லவர்கள் கெட்டவர்கள் என்று மதிப்பிட்டு அன்பு காட்டமாட்டாள். தாயன்பு, குற்றங் குறைகள் உடைய பிள்ளைகளுக்கும் கிடைக்கும்; கட்டாயமாகக் கிடைக்கும். இந்தத் தாயின் மனத்தில் மகவு என்ற பொதுநிலை அங்கீகாரப் பண்பே ஆட்சி செய்கிறது. இறைவனும் அப்படித்தான். இன்னும் சொல்லப் போனால் இறைவனின் கருணை பாவிகள் மேல் விழுவதைப் போல், வேறு யார் மீதும் விழுவது இல்லை. இறைவன் பாவிகளையும் பரிவுடன் ஆட்கொள்கின்றான். அன்பின் ஆற்றல் முன்னே பாவம் ஏது?

பாவியை இறைவன் ஆட்சிகொண்டருளினாலும் பாவத்தை ஏற்பதில்லை; மன்னிப்பதில்லை. பாவச் செயல்களுக்குக் காரணமாக அமைந்துள்ள புலால் ஆற்றலுக்குத் துணைபோகும் ஊனினை உருக்கிப் பதப்படுத்துவான். ஊன் உருகினால் உயிர் உருகும். உயிர் நெகிழ்ந்து நெகிழ்ந்து உருகினால் உயிர் உருகும். உயிர் நலம் சிறக்கும்! உள்ளொனி பெருகும். உள்ளொளி பெருகினால் இன்பம் போதரும். அந்த