பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இன்பம் ஆரா இன்பம்! அந்த உலப்பிலாத முற்றுப்பெறாத இன்பத்தை இறைவன் வழங்கி அருள்கின்றான். வழங்கப் பெற்ற இந்த இன்ப அனுபவத்தை உயிர்கள் ஆர்ந்து அனுபவிக்கின்றனவா? என்று கண்டறிய வேண்டும். இதற்காக இறைவன் ஆன்மாக்கள் பின்னே சுற்றிக்கொண்டே இருக்கிறான். எந்த ஒரு பணியும், அறமும் தொடர்ச்சியாகப் பின் தொடர்நிலையில் கண்காணிக்கப் பெறாது போனால் அந்த அறம் வளராது. வளராதது மட்டுமல்ல, கெட்டும்விடும். ஆதலால் அறம் செய்தலைவிட அறத்தினைப் பாதுகாத்தல் நீங்காக் கடன். உயிர்களும், நன்னெறியைச் சிக்கெனப் பற்றிக் கொள்ள வேண்டும். இஃது ஓர் அருளியல் நிகழ்வு; இந்த நிகழ்வினை,

“பால் நினைந் தூட்டும் தாயினும் சாலப்
பரிந்து நீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த
செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருள்வது இனியே!”

என்ற திருவாசகப் பாடல் விளக்கிக் காட்டுகிறது.

ஆன்மாக்கள் உய்தி பெறுதற்குரிய சிறந்த நெறி தொண்டு நெறியேயாகும். ஏழை மக்கள் தங்களுக்கு எது நல்லது என்று தேர்ந்தறிய மாட்டார்கள். அவர்களால் இயலாது. ஆதலால் படித்தவர்கள்-வளர்ந்தவர்கள், வளராதவர்களுக்கு என்ன வேண்டும் என்று நினைக்க வேண்டும். தாயன்பினும் கூடுதலான அன்புடன் நினைக்க வேண்டும். முதல் நிலையில் நல்லதைக்கூட அந்த மக்கள் ஏற்கமாட்டார்கள். புறக்கணித்துப் பேழ்கணித்து நிற்பர். அந்த நிலையிலும் அவர்களைப் பரிவுணர்வுடன் அணுக