பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழும் நெறி

271


வேண்டும். அவர்களுடைய குற்றங்களைக் காணக்கூடாது; கூறக்கூடாது. எவ்வித அடிப்படையும் இல்லாமலே - காரணங்கள் இல்லாமலே “மனித நிலை”யில் அவர்களுக்கு ஏற்பளிக்க வேண்டும். அதாவது மனிதனை மனிதனாக அங்கீகரித்தல் என்பதாகும். அதேபோழ்து உடன்பாட்டு நிலையில் நின்று, உடன்படுத்திக் கொண்டு அவர்களிடம் உள்ள பாவத்தை நீக்க வேண்டும். பாவத்திற்குக் காரணமான ஊன்தடிப்புடன் கூடிய வாழ்நிலையை மாற்ற வேண்டும். உடல், சதை தாங்கும் சுமைதாங்கியாக அமையாமல் அருள் நலம் சுமக்கும் உடலாக மாறவேண்டும். இருள் செறிந்த அறியாமையிலிருந்து மீட்க வேண்டும். இருளை நீக்கும் முயற்சி எது? ஒளியை உருவாக்க வேண்டும்; அதாவது உள்ளொளியை-ஆன்ம ஞானத்தை வளர்க்க வேண்டும்; இன்பத்தினை வழங்க வேண்டும். அளிக்கப் பெற்ற இன்பத்தினை இடைவழியில் இழக்காமல் வாழ்ந்திடத் துணை செய்ய வேண்டும். இதற்குத் தொடர்ந்து கண்காணித்தல் வேண்டும். இதனை ஆட்சியாளர் Follow up என்பார்கள். நமது நாட்டு நிலையில் முன்னேற்றத் திசையில் அடிவைத்த அளவுக்குப் பின்னோக்கியும் வந்திருக்கிறோம். மதிப்பீடுகள் சீராகச் செய்யப் பெறமையினாலேயே நமது முன்னேற்றம் முன்னேற்றமாகத் தெரியவில்லை. பயனுமில்லாமல் போகிறது.

வாழ வேண்டிவர்களைப் பற்றி எண்ணுமின்! அவர்களுக்குரிய நன்மைகளைப் பற்றி நினைமின்! அவர்கள் நன்றுணர மறுத்தாலும் நினைவகற்றாதீர்! செயலிழக்காதீர்! சாலப் பரிந்து அன்பு செய்ம்மின்! அவர்களிடத்தில் அறிவொளியை ஏற்றித் தருக! அவர்கள் இன்புறு நலன்கள் பெற்று வளர, வாழப் பணி செய்க! செய்த பணியைத் தொடர்ந்து பேணுக! இஃது ஒரு சிறந்த வாழும் நெறி!