பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9


அழுதால் பெறலாம்


நாம் தவறு செய்ய விரும்பாது போனாலும் சார்பால் அல்லது சூழ்நிலையால் தவறுசெய்யும்படி நேரிட்டு விடுகின்றது. அதுமட்டுமின்றி நாம் குறையுடையவர்களே! அதனாலேயும் பொய்யும்-பொய்வழிப் பட்ட செயல்களும் நடமாடுவதுண்டு. இவை தவிர்க்க முடியாதவை என்று சொன்னால்கூடத் தவறில்லை. ஏனெனில் சிவமுத்தி நிலையிலும் கூட மலத்தின் ஆற்றல் செயற்படுமெனச் சைவ நூல் கூறுகின்றன. அதற்கு “வாசனாமலத்” தாக்குதல் என்பர் அறிஞர்கள். ஆதலால் தான் தவறுதல் மனித இயற்கை என்பர் அறிஞர்கள், ஆனால் இயல்பிலே நிகழும் பொய் நிகழ்ச்சிகளுக்கும், வேண்டுமென்றே செய்யும் பொய்மைகளுக்கும், நிறைய வேற்றுமை உண்டு. முன்னையதற்கு மன்னிப்பு உண்டு; பின்னையதற்கு மன்னிப்பு இல்லை. பொய்யைச் சொன்னவரை-அதனோடு தொடர்புடைய தவறான செயல்களைச் செய்தவர்களை இறைவன் மன்னிப்பான் என்பது உண்மை. ஆனால் எப்பொழுது மன்னிப்புக் கிடைக்கும். பாவமன்னிப்புக்கு நம்முடைய சமயம் சொல்லும் முறையே சிறந்தது. குறிப்பிட்ட சில சடங்குகளின் மூலம் பாபத்தைக் கழித்துக் கொள்ளலாம்