பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழாத நெஞ்சம்

279


தொடர்ந்து வரும் துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறுவதே வீடு.

திருக்குறளும் ‘வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை’ என்று கூறுகின்றது. பிறப்பை நீக்கப் பிறப்பையே சாதனமாகக் கொள்வது நமது நெறி. வீட்டு நிலை வினையற்ற நிலை. பிறப்போடு கூடிய நிலை, வினையோடு கூடிய நிலை, வினைத்தொடர்பு அவாவிலும், அவாவினை நிழலெனத் தொடரும்; துன்பத்திலும் ஆழ்த்தும். வினைத்தொடர்பின்மை திருவருளில் ஆழ்த்தும். அதன்பயன் பிறப்பு-அதனைத் தொடரும் வினை - வினைவழிப்பட்ட துன்பம் இவைகளிலிருந்து விடுதலை, செத்துப் பிறக்கும் தொழிலுக்கு முற்றுப்புள்ளி. இத்தகைய குறிக்கோளோடு கூடிய வாழ்க்கையே வாழ்க்கை. இங்ஙனம் வாழ்வதே உண்மையிலேயே வாழ்ந்ததாகக் கருதப்பெறுகிறது.

இத்தகு வாழ்க்கையைப் பெறுவது எங்ஙனம்? உயிர்களின் வளர்ச்சி சிந்தனையினாலும், கூட்டுறவினாலும் ஆவது? வினையில் நீங்கி விளங்கிய அறிவினால் உள்ள இறைவனின் தொடர்பும் சிந்தனையுமே உயிர்களை வாழ்வாங்கு வாழ்கிற வாழ்வுக்கு அழைத்துச் செல்லும். இறைவனைச் சிந்தித்துப் பேசிவாழ்வது பயனுடைய வாழ்க்கை, வினைத் தொடர்பை நீக்கியருளும் சிறப்புறும் வாழ்க்கை. இங்ஙனம் வாழமுடியாத உலகாயகத்தின் வழி உருண்டோடி வாழ்தல் தனக்குத் தானே கேடு விளைவித்துக் கொள்ளும் வாழ்க்கையாகும். யானையின் தலையில் யாரும் மண்ணை அள்ளிப் போடவேண்டாம். அதுவே தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளும். அது போல இறைவனை வாழ்த்தி வாழமுடியாதவர் தமக்குத் தாமே கேடு சூழ்ந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு அவர்கள் வாழ்வதாக நினைப்பு. ஆனால், அவர்கள் வாழ்வதில்லை ஆண்டுகள் பலஓடி இருக்கலாம். போகங்கள் பல துய்த்திருக்கலாம். எனினும் வாழ்க்கையின் குறிக்கோளை - பயனை