பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பதவியிலும் ஆட்சியிலும் இவருக்கு இருந்த ஈடுபாடு குறைவு. சிவசிந்தனை அவரை ஆட்கொண்டிருந்தது.

அதன் காரணமாக நாளும் பல்வேறு அரசியல் - பணிகளில் அவர் ஈடுபட்டாலும் மானுட வாழ்க்கையின் அருமைப்பாடு, வாழும் முறைமை, உய்தி யடைதற்குரிய நெறிமுறைகள் முதலியவற்றில் தம் மனத்தைச் செலுத்தினார்; “ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணுடைய”ராகவே விளங்கினார்.

திருவாதவூரருடைய ஆட்சியில் பாண்டிய நாட்டு மக்கள் பயமின்றிப் பண்பாட்டுடன் வாழ்ந்து வந்தனர். முதலமைச்சர் மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டியனுக்கு, கண் ஆகவும் கவசமாகவும் இருந்து பாதுகாத்தார்; பணி செய்தார்.

அமைச்சுப் பணி செய்தபொழுது பணிக்குரிய காலம் தவிர எஞ்சிய காலத்தில், மெய்ப்பொருள் நூல்கள் கற்றுத் தெளிந்தாரை அணுகி அளவளாவிப் பேசி அரிய உண்மைகளைத் தெரிந்து கொண்டார்; ஞானநெறி நிற்கும் வேட்கையில் முறுகி வளர்ந்தார். திருவாதவூரரின் உடல் அமைச்சுப் பணி செய்தது; ஆன்மா, சிவசிந்தனை செய்தது.

பணிகொண்ட பரமன்

இந்நிலையில் குதிரைப்படைக் காவலர்கள் அரசனை அணுகி “இலாயத்தில் உள்ள குதிரைகள் மூப்படைந்துவிட்டன. புதிய குதிரைகள் வாங்கவேண்டும்” என்று விண்ணப்பித்தனர்.

அரசுக்கு, குதிரைகள் இன்றியமையாதன. அரசர்கள் நாடும் நகரும் பார்க்க, குதிரை மீதுதான் இவர்ந்து செல்வது வழக்கம். ஒரோவழிதான் யானையைப் பயன்படுத்துவர். அத்தேரினை இழுத்துச் செல்லவும் குதிரைகள் தேவை, அரசப் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று.