பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நியாயமே!

293


லுக்குப் பயன்பட்டது. அதன்மூலம் அறமும், கலையும், அருளும் வானுற வளர்ந்து அரசனுக்கு அழியாப் புகழைத் தந்தது. எப்படி அறம் ஆயிற்று? கலைஞர்களும் ஊழியர்களும் திருக்கோயில் கட்டுங்காலத்தில் தொழில் பெற்றனர்; தொழிலுக்கேற்ற ஊதியம் பெற்றனர்; வாழ்வை வளப்படுத்திக் கொண்டனர். இதை அறம் அல்ல என்று எப்படிச் சொல்லமுடியும்? கல்லெல்லாம் கலையாகி, கடவுளராகி, பேசும் தெய்வத்தைத் தன்னகத்தே கொண்டுள்ள கோயில்கள் கலையின் விளக்கந்தரும் இடந்தானே!

உலக உயிர்களுக்குத் தாயும், தந்தையுமாகித் தன்னருள் பொழியும் புனிதன் பிரார்த்தனைக்குப் பயன்படுவதால் திருக்கோயில்கள் அருளியல் விளைவிக்கும் பண்ணைகள் தாமே! அதுமட்டுமா? பரந்த மண்டபங்களும், அவைகளின் ஊடே கலைபயில் கூடங்களும் மருத்துவமனைகளும், நடுவர் மன்றமும் இன்னபல அமைப்புக்களும் அமைந்து விளங்கினமையால் மக்கள் பணிசெய்யும் மன்றமாகவும் திருக்கோயில் விளங்கிற்று. இத்தகு திருக்கோயில் ஒன்றை மாணிக்கவாசகர் எடுத்தது நியாயமே.

அரசன் குதிரைகளோடு வரும்படி மாணிக்கவாசகருக்கு ஆணை பிறப்பித்தான். மாணிக்கவாசகர் என் செய்வார்? தமக்கு உற்ற புகலிடமாய் விளங்கும் இறைவனிடத்தில் முறையிட்டார். ஆம். அவன்தானே எல்லாம். நமக்கு அன்புப்பட்டவர் பாரம் பூண்பது இறைவனின் குணமன்றோ? குதிரைகளை கொண்டு வருவதாகத் திருவருள் ஆணை பிறந்ததும் குறிப்பிட்ட நாளில் குதிரைகள் வரும் என்ற செய்தியோடு மாணிக்கவாசகர் மதுரை சென்றார்; அரசனிடம் தெரிவித்தார். குதிரைகளும் குறிப்பிட்ட நாளில் வந்தன. இறைவன் ஒரு பெருந்திருவிளையாடல் நடத்தினான். காட்டில் திரியும் நரிகளை எல்லாம் பரிகளாக்கினான். தாமே குதிரைச் சேவகனாக அமர்ந்தான். குதிரைகளைக் கொண்டு வந்து அரசனிடம் கயிறு மாற்றிச்