பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

294

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சேர்ப்பித்தான். அரசனும் நிலையற்ற மகிழ்ச்சியில் திளைத்தனன். கதிரவன் படுத்தனன். காரிருள் சூழ்ந்தது. பரிகளெல்லாம் நரிகளாயின. உலகமே நடுங்க ஊளையிட்டன. அரசனுக்குச் செய்தி எட்டியது. வெகுண்டெழுந்தனன். மாணிக்கவாசகரை வெஞ்சிறையில் இட்டு, கல்லுடைக்கச் செய்தான். இடையில் பகலில் பரியும், இரவில் நரியுமாக ஆக்கிய திருவிளையாடலின் உளக்குறிப்புத்தான் என்னே? இக்கருத்தை ஆராய “உறங்குவதுபோலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” என்ற திருக்குறள் நினைவிற்கொண்டு ஆராய்ந்தால் அரிய கருத்துக்கள் வெளிப்படும். இக்குறளின் படி இம்மை-பகலுக்கும் மறுமை இரவுக்கும் உவமிக்கப்படுவது தெளிவாகிறது. இம்மையில் - இன்பம்போலத் தோன்றுவன மறுமையில் துன்பத்தை விளைவிக்கக்கூடும். இந்தப் படிப்பினையைப் பலருக்கு நினைவுபடுத்துவதற்காகவே, பகலில் இன்பந்தரும் குதிரைகளாகவும் இரவில் தொல்லைதரும் நரிகளாகவும் ஆக்கித் திருவிளையாடல் செய்தருளினார். இங்ஙனம் சிந்தித்துப் பார்க்கும் பொழுது பரமன் நரிகளைப் பரிகளாக்கியதும் பரிகளை நரிகளாக்கியதும் நியாயமே! நிற்க.

சிறையில் வாடிய மாணிக்கவாசகர் ஆற்றொணாத் துயருற்றார். அருளாளராகிய மாணிக்கவாசகர் அல்லலுறுவது இயற்கைக்கே தாங்க முடியவில்லை. இயற்கை அன்னை சினங்கொண்டாள். வைகையில் வெள்ளமெனப் பொங்கிப் பாண்டியமாநகரை அழிக்கத் தொடங்கினாள்; பெரும்புயல் மதுரையைச் சூழ்ந்தது. நல்லவர் படுந்துன்பந் தாளாமல் இயற்கை பொங்கி வருவதும் நியாயமே!

“வைகையாற்றின் வெள்ளந்தடுக்கக் குடிக்கோர் ஆள் வருக” என்று அரசனின் ஆணை பிறந்தது. அரசனின் ஆணை கேட்ட குடிமக்கள் வெள்ளம்போல் திரண்டு வெள்ளந்தடுக்கும் வேலையில் ஈடுபட்டனர். ஆனால், ஒரே ஒரு குடி வெள்ளத்தடுப்பு வேலைக்கு ஆளனுப்ப முடியாமல்