பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

296

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வெறும் பிட்டுக்கு மண் சுமந்தது ஏன்? உலக உயிர்கள் வாழ உணவு தேவை. தனக்குத் தேவையான அளவு ஒன்றையே இவ்வுலகிலிருந்து பெற்றுக்கொண்டு, பொன் பொருளில் ஆசைப்படாமல் திருத்தொண்டு செய்யவேண்டும் என்ற கருத்தை விளக்கவே பிட்டுக்கு மண் சுமந்தான்! இவ்வுலக முழுவதையும் ஓர் ஒழுங்கிலும் முறை பிறழாத நிகழ்ச்சியிலும் அழைத்துச் செல்லும் ஆண்டவன் ஏன் தன்னுடைய கொற்றாள் கோலத்தில் அதற்குரிய பொறுப்பைச் செய்து நிறைவேற்றாது விட்டான்? வாழ்க்கை கடமையோடு பிணைக்கப்பட்டது. கடமையைச் செய்யத் தவறுகிறவர்கள் கடுந்தண்டனைக்குரியோர் என்பதை வையகத்துக்கு எடுத்துக் காட்டவே கடமை தவறுவதுபோல் நடித்து அடி பெற்று அறிவுரை கொடுத்தனன். இந்த உலக உயிர்கள் அனைத்தும் இறைவனின் இருப்பிடம் என்பதை உலகுக்கு உணர்த்தவே, அவன்மீது விழுந்த அடி உலகம் முழுவதும் விழுந்தது! இங்ஙனமெல்லாம் மாணிக்கவாசகரது வரலாற்றை உணரும் பொழுது, இந்த வரலாற்றை உலக முழுவதும் உணர்ந்து படிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகின்றது. ஒவ்வொருவரும் மாணிக்கவாசகரது வரலாற்றைப் படித்துப் பயனடைவார்களாக!