பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

298

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருமூலர் கூறியாங்குப் புலன்களை மடை மாற்றலேயாகும். பொறிகள், புலன்கள், உயிர்க்குலத்திற்கு நல்லன செய்தல், அவ்வுயிர்கள் மகிழ்வுழித் தாமும் மகிழ்தல் என்பதே வாழ்வு நெறி. என்று உயிர் தனக்கு வரும் துன்பங்களைச் சற்றும் தயங்காமல் விரும்பி ஏற்று அனுபவிக்குமோ அன்றே துறவு கால் கொள்கிறது. என்று, ஆன்மா பிறர் நலத்திற்காகவே முயன்று உழைக்கும் நோன்பை எடுத்துக் கொள்கிறதோ அன்று துறவு வாழ்க்கை வருகிறது. இத்தகு துறவு இன்று எங்கிருக்கிறது? இன்று, துறவு சாதிகளைக் கூடத் துறந்தபாடில்லை. மாணிக்கவாசகர் பொன்வேண்டாம் என்றார்! ஏன்? புகழையே வேண்டாம் என்றார்; மாணிக்கவாசகர் பழுதிலாத் துறவு பூண்டவர். பழுத்த மனத்து அடியார்; ஆதலால், மாணிக்கவாசகருக்கு இந்த மண்ணிலேயே கடவுட்காட்சி கிடைத்தது.”

“கண்ணால் யானும் கண்டேன் காண்க!” என்று தாம் கண்ட கடவுட் காட்சியை உறுதிப்படுத்துகின்றார்.

மாணிக்கவாசகர் தாம் பிறவாநிலையை அடைந்தது ‘திண்ணந்தான்’ என்று உறுதிப்படுத்துகின்றார்: ஆம்: தொடர்ந்து சங்கிலித் தொடர்போல வந்தது பிறவி; வெட்டப் பெற்றாலும் பூமிக்குள் புதைந்து கிடக்கும் கிழங்கிலிருந்து அடுத்தும் தாவரம் முளைப்பதைப் போல அவாவை அகற்றினாலும் அகந்தையை அடக்கினாலும் அவை தலை காட்டும் இயல்பின. தினையின் அளவு அவா இருந்தாலும் அந்த அவா வெள்ளமாக வளரும் இயல்பினது. அகந்தையும் அப்படித்தான்! பெருங்காயம் இருந்த பாண்டம் போல அகந்தையின் தாக்கம் இருக்கும்! அகந்தைக்குப் பெயர் “மானம்”. சூரபன்மன் முருகவேளினை உணர்ந்து கொண்டு விட்டான்; தொழுதிட நினைக்கிறான்; ஆனால், தடுத்தது மானம் ஒன்றே! மாணிக்கவாசகர் இந்த நிலைகளை எல்லாம் கடந்து விட்டார்! வேண்டிலேன் பொன்! வேண்டிலேன் புகழ்! “ஏசப்பட்டேன் நின்னடியாரில்” என்பது திருவாசகம்.