பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாணிக்கவாசகர் கண்ட காட்சி

299


இங்ஙனம் பாழ்த்த பிறவியாக அமைந்ததை எளிதில் கடக்க அருள் செய்த இறைவனின் திருவருளை எந்தச் சொற்களால் போற்றுவது? புகழ்வது! எங்ஙனம் சிந்திப்பது என்று எண்ணுகின்றார்.

ஆம்! மாணிக்கவாசகர் இறைவன் ஆட்கொண்டருளியமையை வியந்து வியந்து போற்றுகின்றார்! ஏன்? பிறவியிலிருந்து விடுதலை பெற வழி தெரியாமல் தவித்திருக்கிறார் மாணிக்கவாசகர். தனியாக நின்று தவித்திருக்கிறார். இந்தச் சூழ்நிலையில் திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் ஆசிரியராக எழுந்தருளி நெறிகளை அறிவித்து வழிகாட்டியது பெறுததற்கரிய பேறு அல்லவா? இன்றைய மனித சமுதாயம் ‘உதவி’ என்றால் பொருள் கொடுப்பதையே கருதுகிறார்கள். உலகத்தின் எல்லா உதவிகளிலும் சிறந்தது வழிகாட்டும் உதவியேயாகும். வழியறியாது தவித்த மாணிக்கவாசகர் அவர் அருளிய திருவாசக வழி இன்று மக்களுக்கு வழிகாட்டுகிறார்.

மாணிக்கவாசகர் கடவுட்காட்சியைக் கண்டு அனுபவித்தவர்.

மனிதக் காட்சிக்கும் கடவுட் காட்சிக்கும் நிறைய வேறுபாடு உண்டு! மனிதன் தொலைவில் வரும்பொழுது அவனுடைய உருவம் தெரியும். ஆம்! எத்தனை அடி உயரம்? எவ்வளவு கணம்? தொலைவில் மனிதக் காட்சியின் உருவம்! அடுத்து அண்மையில் நகர்ந்து வரும்பொழுது அவன் கையின் நீளம் என்ன? மூக்கு எப்படி இருக்கிறது? அடுத்து அண்மித்து, வந்து நிற்கும் பொழுதுதான் அந்த ஆள் கருப்பா? சிவப்பா? என்பது தெரியவரும். இது மனிதக் காட்சி!

கடவுட் காட்சியில் நெடுந்தொலைவில் வரும்பொழுது வண்ணம்-நிறம் தெரியும். அதனாலேயே “சோதியே” என்று எரிகின்ற சுடரில் ஒளியைப் போற்றி நினைந்து பாராட்டுகின்றார். “செந்தாமரைக் காடு அனைய மேனி” என்கிறார்