பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

304

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திருவமுது. திருவாசகத்தில் திருவெம்பாவைப் பாடல்கள் திருவருள் நிலையை விளக்குவன; திருவருளை வழங்குவன. திருவெம்பாவைப் பாடல்கள் மகளிர் பாடுகின்றனவாக அமைந்துள்ளன. மார்கழித் திருவாதிரைத் திருநாள், சிவபெருமான் திருநாள்! மார்கழித் திருவாதிரைத் திருநாளன்று நிறைவுறும் வகையில் சிவபெருமானுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்வர்; மகளிர் நீர் நிலைகளுக்குச் சென்று நீராடிப் பராசக்தியைப் பாவைத் திருவுருவில் வழிபடுவர். பாவை வழிபாட்டினால் பார் செழிக்கும்; மங்கலமாகிய மனைமாட்சி வளரும்; திருவருளின்பமும் கிடைக்கும். அறியாமையில், இருள் ஆணவத்தில் கிடக்கும் உயிர்களைப் பராசக்தியின் அருள் எடுத்துத் திருவருளைப் பதித்து இன்ப அன்பினை வழங்குவதைப் பாவை விளக்குகிறது.

பாவைப் பாடல்கள் அம்மையை வழிபடும் பாடல்கள், அம்மையப்பனாகவே பாடுதல் மரபு. ஆனால், திருவெம்பாவை சிவசக்தியை-பராசக்தியைப் போற்றிப் பரவுகிறது.

“பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி”

என்பதும்,

“முன்னிக் கடலைச் சுருக்கி”

என்ற பாடலும் அம்மையைப் பாடிப்பரவுவன. ஆதலால், ‘திருவெம்பாவை’ என்கின்றோம்.

மார்கழித் திங்கள்; பொழுது புலரவில்லை. நாட்காலை, ஆர்வமுடைய மகளிர் எழுந்துகூடி நீர்நிலை நோக்கிப் புறப்படுகின்றனர். அதுபோது துயிலெழுந்து வாராதாரின் வீட்டு வாயிலில் நின்று தூங்குபவளை எழுப்புகின்றனர்.

“ஒளி பொருந்திய கண்களையுடைய நங்கையே! தொடக்கமும் முடிவும் இல்லாத அரியபெரிய சோதியை