பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

308

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



மார்கழித் திங்கள்; பொழுது புலர்கிறது. மண்ணிருள் நீங்குகிறது; மனத்திருள் நீங்கவில்லை. அகவிருள் நீக்கத்திற்குரிய அகனமர்ந்த வழிபாட்டினாலேயாம். வழிபாட்டிற்கு மகளிர் புறப்பட்டு விட்டனர். வழிபாட்டில் கலந்துகொள்ள வராத தோழியின் வீட்டு வாயிலில் எழுப்புகின்றனர். காலத்தில் வாராது தூங்குபவளிடம் நேற்று “நீங்கள் நாட் காலையில் எழுந்துவரும் முன்னே நான் எழுந்து வந்து இறைவனைத் துதிப்பேன்; புகழ்ந்து பாடுவேன்” என்று சொன்னாயே! இப்பொழுது உறங்குகின்றாயே!” என்று நினைவூட்டுகின்றனர். “செயலில் திட்பமின்றிப் பேசிப் பயனென்ன?” உடன் எழுந்துவா! கதவைத்திற!” என்கின்றனர்.

தூங்குகின்றவள், “மெய்யன்புடையீர்! பழமையான அடிமையுடையீர்! நீவிர் குற்றம் பாராட்டாது சீராட்டி ஆட்கொள்ளலாகாதோ?” என்று கூறுகிறாள். அவளை எழுப்பக் கூடியிருந்தவர்கள், “உன் அன்பு அறியாததா? மனத்தூய்மையுடையவர்கள் இறைவனைப் பாடமாட்டார்களோ? உன்னை எழுப்பவந்த எங்களுக்கு நீ தரும் பரிசு வேண்டியது தான்!” என்று கூறுகிறார்கள்.

இத்திருப்பாடல் இறைவனை மொழியால் பாராட்டி வணங்குகிறது; ‘பழ அடியார்’-வழிவழித் தொண்டு பூண்டவர்; இறைவனுக்குத் தொண்டு பூண்டொழுகும் பரம்பரைக் குடியிற் பிறந்தவர் பழைய அடியார். ஒரே பிறப்பிலும் கூடப் பன்னெடு நாட்கள் மாறா அன்பில் தொண்டு செய்து வருவாரும் பழைய அடியாராவர் ‘பாங்குடையீர்’ என்பவர், பழைய அடியார்க்குத் துணை நிற்கும் தோழமைப் பண்பில் சிறந்தோராவர். ‘பத்துடையீர்’ என்பவர். அடியார்க்குரிய இலக்கணம் பத்து உடையவர். அதுவும் புறத்திலக்கணம் பத்து, அகத்திலக்கணம் பத்து என்று உபதேச காண்டம் கூறும். புறத்திலக்கணமாவது திருநீறும் கண்டிகையும் அணிதல், சிவனடியாரை வணங்கல்,