பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை - திருப்பள்ளி யெழுச்சி விளக்கம்

311


நிற்கின்றனர். ஆதலால், எண்ணும் நிலையில் இவர்கள் இல்லை. கணக்கு வழக்கைக் கடந்த திருவடியைப் பாடிக் கசிந்துருகி நிற்பவர்களால் எங்ஙனம் எண்ண இயலும்? இறைவன் திருநாமம், பிறவிப் பிணிக்கு மருந்து. ஆதலால், மருந்து என்றார். உலகில் நிலவும் ஒரு பிணிக்குப் பல மருந்துகள் உண்டு. ஆனால், பிறவிப் பிணிக்கு மருந்துகள் பல இல்லை. இறைவன் திருவடியாகிய ஒரு மருந்தே பிறவிப் பிணிக்கு மருந்து. ஆதலால், “விண்ணுக்கு ஒரு மருந்து” என்றார். ‘ஒரு’ என்பது, எண் பொருட்டன்று’ சிறப்புக் கருதியே! அந்த ஒரு மருந்தை நாம் அனைவரும் காட்சியால் அறிந்து எண்ணி இன்புறப் பாடுவோமாக!

மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம்
போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ! கடைதிறயாய்
ஞாலமே விண்ணே பிறவே யறிவரியான்
கோலமு நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்
றோல மிடினு முணரா யுணராய்காண்
ஏலக் குழவி பரிசேலோ ரெம்பாவாய்.

5

பொழுது புலர இருக்கிறது. ஞாயிற்றொளியின் முன்னாலே இரிந்தோட இருக்கும் இருள் கவ்விப் பிடிக்கிறது. அதுபோல், திருவருள் வழி நிற்க வேண்டிய உயிர்கள் ஞானநெறிப்படுதற்குமுன், திணிந்த இருளில் கிடக்கும். எளிதில் அருள் நெறிக்குத் திரும்பா! இறைவன் திரு நாமத்தைப் போரொலியாகக் கேட்டாலும் சற்றும் ஞானம் வராது என்னும் குறிப்பை இந்தத் திருப்பாடலில் மாணிக்கவாசகர் விளக்குகின்றார்.

உறங்குபவளை எழுப்பவந்து நிற்போர், “சிவனே! சிவனே!” என்று ஓலமிடுகின்றனர். உறங்குபவள் எழுந்திருக்கவில்லை. உடலுக்கு எழிலும் நலமும் தேடும் நாட்டமுடை