பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

312

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


யவர்கள், உயிருக்கு நலம் நாடும் நாட்டமில்லாமல் இருக்கின்றனரே என்ற இரக்கக் குறிப்பு அறிந்து உணர்க! உறங்குபவள், யாதும் அறியாதவளல்லள்; வாழ்வியலிற் சதுரப்பாடுடையவள், அறியாததை அறிந்ததைப் போலப் பேசும் திறத்தள்! ஊரில், உலகத்தில் உள்ள பொய்களெல்லாம் அவள் நாவிற்கு அன்றாடம் அத்துபடி! இத்தகையோர் வஞ்சகர்! ஆயினும், தேனூறப் பேசுவர்; இனிக்க இனிக்கப் பேசுவர்; நெஞ்சைத் திறந்து காட்டமாட்டார்கள். ‘நெஞ்சு’ என்று ஒன்று இருந்தால்தானே அவர்கள் திறந்து காட்ட! உறங்குபவள் கலந்துரையாடி மகிழ்ந்திருந்தபோது “திருமாலும் நான் முகனும் தேடிக் காணாத திருவருள்மலையை யானறிவேன்!” என்று கூறியிருக்கிறாள்! அங்ஙனம் உண்மையில் அறிந்திருப்பின் சிவனே! சிவனே!” என்ற ஓலம் கேட்ட பிறகும் உறங்குதல் இயலாது. அதுமட்டுமா? அவன்-அந்த மாமருந்து, உயிர்களைத் திருத்தி ஆட்கொள்ளும் கருணையைப் பாடும்பொழுது உண்மைப் பத்திமையுடைய ஆளாகாது வாளா இருத்தல் இயல்பன்று. ஆதலால் அவள் ‘அறிவேன்’ என்று சொல்லியிருந்தது பொய். பொய்ம்மையில் மெய்ம்மை காண இயலாது. மெய்பொருளை அனுபவித்தற்கியலாது; ஆதலால், பொய்யினைத் தவிர்த்திடுமின்! கண்ணுதற் பெருமான் கருணையைப் பாடுமின்! ‘சிவனே, சிவனே! என்று ஓல மிடுமின் என்பது பாட்டின் பொருள்!

திருமாலும் நான்முகனும் காணாத மலையினை என்பது ‘திருமால்’ ‘நான்முகன்’ என்ற பெயர்களைக் கொண்டு மயங்கற்க இப்பெயர்ச் சொற்கள் தத்துவங்களை விளக்க வந்தன. திருமால், செல்வத்தின் சின்னம்! நான்முகன் அறிவின் சின்னம்! செல்வமும் அறிவும் செருக்கினை விளைவிக்கும். செல்வம் ‘எனது’ என்ற செருக்கினையும், அறிவு ‘நான்’ என்ற செருக்கினையும் தரும். ‘நான்’ ‘எனது’ என்ற செருக்கற்ற நிலையே திருவடி-திருவடியைச் சார்ந்த திருவருளின்ப நிலை, என்ற கருத்தினை “மாலறியா நான்