பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

320

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஓருயிராக உருமாறி, ஆண்-பெண் வேறுபாட்டை இழந்து இறையருளில் திளைத்தலே இன்ப அன்பு நிலை, பெண், சிவத்தினை மணத்தல் சிவ நெறியில் இல்லை. சிவம், போகங்களைக் கடந்த போகம். அதனால் பாவை மகளிர் இறைவனை மணக்க விரும்பவில்லை. அடியார்களை மணக்க விரும்புகின்றனர். இறைவனிடம் மாறா அன்புடைய அடியார்களைத் திருமணம் செய்து கொள்வது நோக்கத்திற்குத் துணை செய்யும். இம்மை வாழ்க்கை சிறக்கும். இன்பமும் கிடைக்கும்; இன்ப அன்பும் கிடைக்கும். மங்கையர்க்கரசியார்-நின்ற சீர் நெடுமாறன் வரலாறு அறிக!

பழைமை, புதுமை என்பன காலத்தைப் பொறுத்து அல்ல. நேற்றும், இன்றும் என்றும் வாழ்விற்கு நலத்தருவன புதுமையே. காலத்தாற் பழைமையானதும், பின்னைப் புதுமையாக உயிர்களை இன்புறுத்தல் கூடும். இறைவன் கால தத்துவத்தைக் கடந்தவன். காலம் எண்ணிக் காட்டும் முயற்சி சில ஆயிரம் ஆண்டுகளாகத் தான். மனிதகுலம் தொடங்கிய நாளிலிருந்து கால அளவு முறை இருந்ததில்லை. வரலாற்றாசிரியன் “வரலாற்றுக் காலத்திற்கு முன்பு” என்பான். இறைவனோ காலங்களைக் கடந்தவன்; ஆதலால் “முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருள்” என்றார். கால எல்லைக்குட்பட்ட பொருள்கள் உருமாற்றங்கள் பெறும்; சில அழியவும் கூடும். எல்லாம் வல்ல இறைவனருளோ உருமாற்றங்கள் பெறாதது; அழியாதது. அதனால் இறைவன், ‘முன்னைப் பழம் பொருள்; அதனால் உயிர்களுக்கு என்ன பயன்? காலச் சுழற்சியில் உருமாறி அலைந்து எய்த்துக் களைத்து வளரும் உயிர்களுக்கு அந்தந்தக் காலச் சூழ்நிலையில் உயிர்கள் துய்த்து மகிழ்ந்து அனுபவிக்கும் புதுமைக் கோலங்களை வடிவங்களை - உணர்வுகளை இறைவன் பெற்றுப் பின்னைப் புதுமையாகவும் விளங்கிப்பயன்படுகிறான். ஆட்கொள்கிறான்.