பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை - திருப்பள்ளி யெழுச்சி விளக்கம்

323


இருப்பது உணர்த்தப்படுகிறது. இத்திருவுருவமே பழந்தமிழகத்தின் வழிபாட்டுத் திருமேனி. அம்மையப்பன் ஓருவாகத் திகழும் திருக்கோலத்தைத் திருக்கழுமலப் பதிகத்தில் “தொன்மைக் கோலம்” என்று அருளிச் செய்துள்ளார். இறைவன், தொண்டர் உள்ளத்தினன். அவனுக்கு ஊரில்லை; பேரில்லை; உற்றாரில்லை; அயலாரில்லை. நாமும் இறைவனைத் தொழுவோம்! தொண்டராய்த் தொழும்பு செய்வோம்? அவனை நம் முள்ளத்தனாகப் பெறுவோம்! இறையருள் வழிநின்று மனித குலத்தில் உறவினர், அயலார் என்றில்லாமல் ஒருமை நெறியில் சன்மார்க்கராய் வாழ்வோம்!

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்கா ணாரழல்போற்
செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ யாட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்க ளுய்யும் வகையெல்லா முய்த்தொழிந்தோம்
எய்யாமற் காப்பா யெமையேலோ ரெம்பாவாய்.

11

மார்கழித் திங்கள் குளிர்காலம்; சுனையில் படிப் படியாகக் கால்வைத்து இறங்குதல் இயலாது; குளிர் வருத்தும். ஆதலால், திடீரெனச் சுனையில் குதித்து விடுகின்றனர். தண்ணீரைக் குடைந்து ஆடுதலால் தண்ணீர் இதமான சூடுறுகிறது.

“மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையால் குடைந்து குடைந்து”

ஆடுவதாகப் பாடினார். எல்லாவற்றிற்கும் அப்பாலாகக் கடந்து நிற்கும் கடவுள், உயிர்களை ஆட்கொள்ளத் திருமேனி தாங்கி ஆடும் திருவிளையாடல்கள் விளக்கப் பெற்றுள்ளன.