பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

324

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இறைவன் திருவருளை நினைந்து நீரில் ஆடுதல் உடல் - உயிர்த்தூய்மைகளை ஒருசேரத் தரும். ஆதலால் இங்குச் சுனையாடும் மகளிர், ‘ஐயா! நாங்கள் வழியடியோம்! செய்யா! வெண்ணீறாடி! செல்வா! மையார் தடங்கண் மடந்தை மணவாளா!” என்று பாடிப் பரவுகின்றனர். ‘வெண்ணீறாடி!’ என்றும், ‘மணவாளா’ என்றும் இறைவன் திருமேனியை வாழ்த்துகின்றனர். வெண்ணீறு அணிவது வினைநீக்கம் தரும். அங்ஙனமாயின் வினையினீங்கி விளங்கிய அறிவினனாகிய இறைவனுக்கு ஏன் வெண்ணீறு?

“.................தொழுதெழுவார்
வினைவளம் நீறெழ நீறணி அம்பலவன்.......”

என்பது திருக்கோவையார். அதாவது, தம்மைத் தொழுவார் வினை நீறாகும் வண்ணம் இறைவன் நீறணிகின்றான். குழந்தையை நோக்கித் தாய் மருந்துண்பதுபோல! இறைவன் திருமேனியிலுள்ள வெண்ணீறு ஊழிப்பெருந்தீயில் விளைந்தது. இறைவனை ‘ஆரழல்போற் செய்யா!’ என்றதால் படைப்புக்குரிய செம்மையையும், ‘வெண்மை’ என்றதால் பாதுகாப்பையும் ‘நீறு’ என்றதால் துடைப்பையும், ‘செல்வா’ என்றதால் வீடுபேறு அருளுதலையும் காட்டிற்று.

இறைவனைத் தீ வடிவினனாக வண்ங்குதல் வழக்கு. ஐம்பூதங்களில் தீ ஒன்றே சார்ந்த பொருளின் தூய்மையின்மையை நீக்கித் தூய்மை செய்து நலந்தருகிறது. அதுபோல இறைவனின் திருவருள், நம்முடைய ஆணவத்தைச் சுட்டெரித்து நலம் தருகிறது. இறைவன் உயிர்களை ஆட்கொள்ளும்வகை ஒன்றல்ல; பலப்பல; ஆட்கொள்ளும் வகைகள் மாறுபடுவது உயிர்களின் தகுதி நோக்கியேயாம். இறைவன் உயிர்களை ஆட்கொள்ள உயிரினது பொறி, புலன்களைத் திருவருள் வயத்ததாகச் செய்திருக்கின்றான். உயிர்கள் தம் அகக் கருவிகள் அருளார்ந்த நிலையை அடைந்திடச் சிவபூசையை மேற்கொள்கின்றன. சிவயோகம்