பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

326

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


புகழைப் பாடுதல் மூலம் உடலும் தூய்மையுறுகிறது; உயிரும் தூய்மையுறுகிறது. சாதாரண நீர்நிலைச் சுனைகள்கூடத் தீர்த்தங்களாகின்றன. மகளிர் வளையல்கள் ஒலிக்கவும் மேகலைகள் ஆரவாரம் செய்யவும், குழலணி மலர்களில் வண்டுகள் எழுந்து ஒலிக்கவும் பொய்கையைக் குடைந்து ஆடுகின்றனர்; ஈசனின் பொற்பாதத்தைப் பாடுகின்றனர்.

துயர், காரியம், துயருக்குக் காரணம் இருள்மலப் பிணிப்பு; அதாவது, ஆணவத்தின் சேர்க்கை; அறியாமையின் கூட்டு. உயிரை இயல்பிற் பற்றியிருக்கும் ஆணவத்தினை அகற்றி, இன்ப அன்பினை வழங்க அளிக்கப் பெறுவது பிறவி. பிணி நிக்க வந்தது பிறவி, சார்ந்ததன் காரணத்தால், உபசார வழக்கால் பிறவியும் பிணி என்றே கூறப்பெற்றது. பிறவி, ஒரு மருந்து, மருந்து உண்டபின் இன்பந்தருமானாலும் உண்ணும் பொழுதும், பத்தியம் காக்கும்பொழுதும் துன்பத்தினைத் தருகிறதல்லவா? அதுபோல அறியாமை நீக்கத்தில் இழப்பல்லாதனவற்றை இழப்பென்று கருதி அல்லலுறும் துன்பம் உண்டல்லவா? அத்துன்ப நுகர்வுக்குப் பின்தானே இன்பம்! அவ்வளவில் பிறவியும் துன்பமெனக் கூறப்பெறுகிறது. ஒரோவழி நோயில்லாவிடினும் சில உயிர்கள் பிறத்தலுண்டு. அது மற்றவர் நோய் நீக்க எடுக்கும் பிறப்பே யாகும். நாயன்மார்களின் பிறப்பு இத்தகையதே!

இத்திருப்பாடலில் இறைவனுடைய திருநாமம் ‘தீர்த்தன்’ என்று பேசப்படுகிறது. உயிர்கள் உய்யும் நெறிகளில் ஒன்று தீர்த்தமாடுதல், தீர்த்தமாடுதல் உயிர்கள் மகிழ்வொடு செய்யும் ஓர் அறப்பணி. இறையருள் பெறுதற்குரிய மற்ற நெறிகளைவிடத் தீர்த்தமாடுதலில் எளிமையும், மகிழ்ச்சியும் கலந்திருக்கிறது. அதனால் இறைவனே தீர்த்தங்களாகின்றான்.

“சென்றாடும் தீர்த்தங்கள் ஆனார் தாமே”

என்பது அப்பரடிகள் வாக்கு. தீர்த்தங்களாடும்பொழுது உடல் தண்ணீரிலும், உயிர் திருவருளிலும் தோயாமல்